×

குழந்தைகள் குதூகலிக்கும் அறைகள்!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

குழந்தைகளின் அடையாளமே அவர்களின் குறும்புத்தனம் என்றாலும் சுறுசுறுப்பாக பல்வேறு விஷயங்களை செய்து கொண்டே இருப்பார்கள். ஒருநாள் அவர்கள் வழக்கத்துக்கு மாறாக இருந்தாலே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்துவிடும். விளையாடிக் கொண்டு, ஆடிக் கொண்டு இருப்பதுதான் குழந்தைகளின் சிறப்பு. மேலைநாடுகளில் மிகச் சிறிய வயதிலேயே பிள்ளைகளை தனி அறையில் படுக்க வைத்துப் பழக்குவார்கள். சுதந்திரமாக வளர வேண்டும் என்பது அவர்களின் கருத்து. இரண்டு குழந்தைகள் இருந்தால்கூட ‘எங்களின் அறை’ என்று இருவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விடுகிறது. நாம் முன்பெல்லாம் தனி அறை என்று பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில் தனி அறை பிள்ளைகளுக்கும் தேவை என்றாகிவிட்டது.

இந்த கணினி யுகத்தில் பிள்ளைகளுக்கு நிறைய புரிதல்கள் உள்ளது. விருப்பு, வெறுப்புகள் வெளிப்படுத்துகிறார்கள். பொதுவாக பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் ‘ெபாருட்கள் வைத்த இடத்தில் இருப்பதில்லை’ என்று சொல்வதை கேட்டிருப்போம். சோபா மேல் குதித்து விளையாடுவது, சுவர் முழுவதும் கிறுக்கல், பொம்மைகளை பிய்த்துப் போடுவது, தண்ணீர் கொட்டுவது என அவர்கள் செய்வதை பார்த்து நாம் குறை சொன்னாலும் அதுதான் பிள்ளைகளின் தனிச் சிறப்பு. சில பிள்ளைகள் வீட்டிற்குள்ளே கிரிக்கெட் பந்து போடுவது போல கையை ஓங்கி வீசுவார்கள். கால் பந்து விளையாடும் பிள்ளைகள் பார்க்கும் பொருளையெல்லாம் காலால் தட்டி பயிற்சி எடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள். பிள்ளைகளை குறை சொல்லாமல் உளவியல் ரீதியாக யோசிப்போம்.

இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு என்றால், அதில் ஒன்று மாஸ்டர் பெட்ரூமாக இருக்கும். இரண்டாவது அறை பிள்ளைகளுக்கு என்று ஒதுக்கினால் அதில் அவர்களின் எண்ணங்களுக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும். பிள்ளைகளின் மனதினை கொள்ளைக் கொள்ளும் விதமாக அதனை அமைக்க வேண்டும். அதனால் அவர்களின் உளவியல் சார்ந்து அணுகலாம். தனி அறை இல்லாத பட்சத்தில் பெரிய அறையில் ஒரு பகுதியை அவர்களுக்கு என ஒதுக்கித் தரலாம்.

அதில் அவர்களுக்கு என தனிப்பட்ட வசதிகள் அமைப்பது அவசியம். அந்த அலங்காரம் தனக்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்று பிள்ளைகள் நினைக்கும் போது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும். செயல்களை ஆர்வத்துடன் செய்யத் தூண்டும். உதாரணத்திற்கு புதுப்பேனா, புது நோட்டு, கலர் பென்சில் வாங்கிக் கொடுத்தால் அதை கொண்டு நாள் முழுதும் எழுதுவார்கள். அதே போல் பள்ளிக்கு புதிய பை, புது தண்ணீர் பாட்டில், சாப்பாட்டு பை வாங்கி தந்தாலும் அது அவர்களை ஈர்க்க செய்யும். அப்படியிருக்கையில் நிரந்தரமாக அழகிய அமைப்பில் ஒரு அறையை தந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

குழந்தைகள் சிறியவர்களாக இருந்தால், ‘வார்டு ரோப்பினை’ சிறியதாக அமைத்து அதில் விளையாட்டுப் பொருட்களை அடுக்கலாம். விளையாடும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்தி விட்டு, படுக்கப் போகுமுன் அடுக்கி வைக்கச் சொல்லி பழக்கலாம். பிறகு தரம் வாரியாக பிரித்து அடுக்க வேண்டும் என்று சொன்னால் அதை பின்பற்றுவார்கள். அவர்களுக்கான முக்கியத்துவம் தருகிேறாம் என்பதை புரிந்து கொண்டால் போதும். குழந்தைகள் மனதை அறிந்தால் எதுவும் சிரமம் கிடையாது.

ஒரே அறையினை இருவருக்கும் ஒதுக்கும் போது, ஒரு பக்கம் அழகிய புத்தக அலமாரி அமைத்து தரலாம். ‘வால் ஹாங்கிக்’ என்று சொல்லக்கூடிய சுவற்றிலேயே பொருத்தும் அலமாரி, சிறிய அறையின் இடத்தை மிச்சப்படுத்த உதவும். அலமாரியின் அடிப்பகுதியில் நீளவாக்கில் மடித்து எடுத்து பயன்படுத்தக்கூடிய மேசை அமைக்கலாம். வேண்டிய நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் மடக்கி வைக்கலாம். இடமும் மிச்சமாகும். படிக்கும் மேசையருகே பிள்ளைகள் விரும்பும் வண்ணங்களில் சுவற்றில் படங்கள் வரையலாம்.

பிள்ளைகள் அறை வண்ணமயமாகக் காட்சி தந்தாலே அவர்களுக்குப் பிடித்து விடும். இரண்டு பிள்ளைகளுக்கு தனித்தனி அறையினை ஒதுக்கும் போது அவர்கள் சுதந்திரமாக செயல்பட பல விஷயங்களை செய்து தர முடியும். இன்று பெரும்பாலான பிள்ளைகள் விரும்புவது ‘பங்க்பெட்’ என்னும் இரண்டடுக்குக் கட்டில். ரயில் பயணத்தில் ‘பர்த்’கள் இருப்பது போல இந்தக் கட்டில் அமைக்கப்பட்டிருக்கும். படுக்கை மட்டுமில்லாது, அதை அறை போல் அமைத்து, பிள்ளைகளின் பொருட்களை அடுக்கியும் வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை இடம் மிச்சப்படுத்தினால், நடுப்பகுதியில் அழகிய கூடை போன்ற ஊஞ்சல் கூட போடலாம். பிள்ளைகளுக்காக பார்த்துப் பார்த்து அனைத்து வசதிகளையும் ஒரே அறையில் தந்து விடும் பொழுது, அவர்கள் தங்கள் வேலைகளை தாங்களே கவனித்துக் கொள்வார்கள். அதனால் தான் பெற்றோர் பிள்ளைகளின் மனதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களின் அறையினை அமைக்க வேண்டும்.

வரவேற்பறையின் சோபாவை கிழிக்கிறான், பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதில்லை, நீளம் தாண்டி, உயரம் தாண்டி விளையாடுகிறான் போன்ற புலம்பல்களைக் கூற வேண்டிய அவசியமே கிடையாது. என்னதான் அழகுற அமைத்து தந்தாலும், ஓரளவுதான் அவர்களிடம் எதிர்பார்க்க முடியும். வளர வளரத்தான் அவர்கள் பக்குவப்பட்டு அனைத்தையும் ஒழுங்காக வைப்பார்கள்.

அந்த விஷயத்தில் நம் அன்பான அறிவுரைகளும், அனுசரணையும் அவர்களுக்குத் தேவை. நம் விருப்பத்தை அங்கு திணிக்காமல், அவர்கள் மனம் எதை விரும்புகிறதோ அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். உதாரணத்திற்கு நமக்குப் பிடித்த படம் அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். விளையாட்டு வீரர்களை அவர்கள் விரும்பினால், அவர்களின் அறையில் அவரின் புகைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டலாம். மேலும் வளர வளர விளையாட்டுகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்கள் என அவர்களின் விருப்பம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், ‘ஹிமேன்’, ‘சக்திமான்’ போன்ற பொம்மைகள் பிரபலமாக இருந்தன. இன்று பிள்ளைகள் ஒரு படி மேலே யோசிக்கிறார்கள். அறிவியலில் மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் முன்னேற்றம் எந்தவிதத்திலும் தடைபடாமல், பொறுமையோடு செயல்பட வேண்டும். இப்பொழுது பெரும்பாலான பிள்ளைகள் ‘கணினி’ பயன்படுத்துவதால் அதற்கேற்ற இடம் அமைத்துத் தருவதும் முக்கியமாகிறது. நிறைய ‘போர்ட்டபின்’ என்று சொல்லக் கூடிய மேசை அமைப்புகளும் உள்ளன. மேசைக்கு அடியில் சக்கரம் இருப்பதால், வேண்டிய இடத்திற்கு தள்ளிச் செல்லலாம். ‘கணினி’ மேசைகள் ரெடிமேடாக உட்புற அறைகளுடன் கிடைக்கின்றன. அது சார்ந்த பொருட்களை அதில் வைத்துக் கொள்ளலாம்.

படிக்கும் மேசையாகவும் மாற்றி அமைக்க முடியும். சில மேசைகளில் இரவு விளக்கும் பொருத்தப்பட்டு கிடைக்கிறது. இரவு நேரங்களில் இடைஞ்சல் இல்லாமல் நம் வேலைகளை செய்து கொள்ள முடியும். கட்டடக் கலை படிப்பவர்கள் படம் வரைவதற்காக மேசைக்கு அடியில் பலகையினை பொருத்தி இருப்பார்கள். அதனை சுலபமாக இழுத்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் மேசைக்குள் அடக்கிவிடலாம். இது போல் நம்முடைய வசதிக்கு ஏற்ப வேண்டி அமைப்புகளை குறைந்த செலவில் செய்து கொள்ளும் அளவிற்கு வசதிகள் வந்துவிட்டது. சிறிய இடமாக இருந்தாலும் நிறைவான திருப்தியைத் தரும்.

வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் அனைத்தும் இப்போது ரெடிமேடாக கிடைக்கிறது. குழந்தைகள் அறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஷோகேஸ் முதல் அவர்கள் படுக்கும் கட்டில், மேசை, நாற்காலி, வார்டுரோப் என அனைத்தும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கலாம். மேலும், விளையாட்டுச் சாமான்கள், பாடப் புத்தகங்கள், கதை புத்தகங்கள், தினசரி பயன்படுத்தும் துணிமணிகள், பள்ளிச் சீருடைகள் என பிரித்து வார்ட்ரோப்பில் அடுக்கி வைத்தால் வெளியே தெரியாமல் அனைத்தும் உள்ளடங்கி பார்க்க அழகாக இருக்கும். ‘சோபா கம்பெட்’டுகள் கிடைக்கின்றன. இல்லாவிடில் ‘திவான்’ போன்று அமைத்தால், இரவில் படுக்கையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். திவான் அடியில் ‘பாக்ஸ்’ அமைப்பு தந்து அதிலும் பொருட்களை அடுக்கலாம். அறை சிறியதாக இருந்தாலும், இடத்தை மிச்சப்படுத்தக்கூடிய அமைப்பை தந்துவிட்டால், அறை பெரியது போல் காட்சியளிக்கும்.

சிறு வயதில் குழந்தைகளுக்கு அமைக்கும் அறை அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு அமைக்கப்படும் அறைகளில் பிள்ளைகளின் ரசனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நம் ஆசைகளை திணிக்காமல், அவர்கள் விரும்பும் விளையாட்டு வீரர்களோ, இயற்கை சம்பந்தப்பட்டதோ, பாடம் சம்பந்தப்பட்டதோ எதுவாக
இருந்தாலும் முதலிடம் தந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பல்வேறு வசதிகள் தந்து அழகுப்படுத்துவதன் மூலம், குழந்தைகள் அறையாக, படிக்கும் அறையாக, விருந்தினர் தங்கும் அறை என எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது தனிவீடு உள்ளவர்களுக்கு படிக்கும் அறை, பூஜை அறை, பொருட்கள் சேமித்து வைக்கும் அறை என தனி அமைப்புகள் தரமுடியும். அனைத்து வசதிகளும் செய்த பின் அறையில் இடம் இருந்தால், குஷன் அமைப்புடன் திவான் அமைப்புத் தரலாம்.

இதனை தரையிலும் அமைக்கலாம். வீடுகளில் சுவர் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிப்பதால், அலமாரிகளை அதற்கு ஏற்ப வடிவமைக்கலாம். அதுவே அறையின் அலங்காரமாகக் கூட மாறும். இந்த அலமாரியில் குழந்தைகள் பெற்ற பரிசுக் கோப்பைகள், குடும்ப புகைப்படங்கள் என அடுக்கலாம். அதில் இரண்டு அலமாரிகளில் கண்ணாடி கதவுகளை அமைப்பதால், பார்க்க அழகாக இருக்கும். மேலும், இடம் இருந்தால் வீட்டிற்குள் வளரும் நிஜ செடிகள் அல்லது செயற்கை பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.

கண்களுக்கு பசுமையாக இருக்கும். பிள்ளைகளின் இளம் வயது முதல் அவர்களின் ஒவ்வொரு காலக்கட்ட வளர்ச்சியினை குறிக்கும் படங்களை கலைநயம் கொண்ட ‘பிரேம்’களில்
சுவற்றில் மாட்டலாம். பிள்ளைகள் பயன்படுத்தும் மேசை மற்றும் மெத்தை விரிப்பு, தலையணை உறை அனைத்திலும் அவர்களுக்குப் பிடித்த வண்ணம் மற்றும் கார்ட்டூன் பொம்மைகள் கொண்ட டிசைன்களை பயன்படுத்தி அவர்களின் மனதை ஈர்க்கலாம். மேலை நாடுகளில் பெரும்பாலும் தனி வீடுகள் என்பதால், அடித்தளம், தரைதளம், முதல் தளம் என வீட்டின் அமைப்பு இருக்கும்.

வருடத்தில் பாதி நாட்கள் பனிப்பெய்து, பிள்ளைகள் வெளியில் சென்று ஓடியாட விளையாட முடியாத சூழல் ஏற்படும் என்பதற்காக வீட்டிற்குள் விளையாடுவதற்காக அமைப்புகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட இடத்தை ‘ப்ளே ஏரியா’வாக மாற்றி அமைத்திருப்பார்கள். பெரிய கூடாரம் போன்ற அமைப்பில் உள்ளே காற்று புகுத்தினால் போதும், அதில் குதித்து விளையாடலாம். தேவைப்படாத போது மடித்து வைத்துக் கொள்ளலாம்.

சில வீடுகளில் நீர்வீழ்ச்சி அமைப்பு இருக்கும். மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் போல் ஆடுவார்கள். இரண்டு மரங்களுக்கிடையே தூளி கட்டி அதில் படுத்துக் கொண்டு விளையாடுவார்கள். தெரு விளையாட்டுக்கள் மறைந்து போன இக்காலத்தில் சறுக்கு மரம், ஊஞ்சலாட்டம், பிடித்துத் தொங்கி விளையாடுவது போன்றவற்றை இருக்கும் இடத்தில் வசதிக்கு ஏற்ப அமைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளிடம் இருந்து கைபேசிக்கு ஓய்வு தரலாம்.

நகரங்களில் பெரும்பாலான அடுக்குமாடி கட்டடங்களில் பிள்ளைகள் விளையாட நிறைய அமைப்புகளை தருகிறார்கள்.வயிறு நிறைய சாப்பாடு மட்டும் பிள்ளைகளுக்கு போதாது. விளையாட்டும் அவசியம். அப்போதுதான் அவர்களால் பாடங்களில் கவனம் செலுத்த முடியும். பிள்ளைகள் ஓடி விளையாடி மகிழும் அளவுக்கு சூழல் ஏற்படுத்தித் தந்தால் போதும். சுறுசுறுப்பாக பிள்ளைகள் எப்போதும் இருக்க உளவியல் ரீதியாக அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது நம் கடமை. இடம் எவ்வளவு, அறை எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல… தேவைகளை பூர்த்தி செய்துள்ளோமா என்பதுதான் முக்கியம்.

 

Tags : Kumkum ,Nandavanam ,
× RELATED திட்டமிடாத வாழ்க்கையில் என் குழந்தைகளால் எனக்கொரு பாதை உருவானது!