நன்றி குங்குமம் தோழி
ஒருவரின் முகத் தோற்றத்திற்கு மிகவும் முக்கியமானது புருவங்கள். கண்களுக்கு மேல் இருக்கும் இந்த புருவங்கள்தான் முகத்தின் அமைப்பினை மாற்றி அமைக்கும். பொதுவாக பெண்கள் தங்களின் புருவங்கள் அடர்த்தியாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால், எல்லோருக்கும் புருவங்கள் அவ்வாறு அமைவதில்லை. சிலருக்கு அடர்த்தியாக இருக்கும். ஒரு சிலருக்கு மெல்லியதாக இருப்பது மட்டுமில்லாமல், புருவங்கள் முழுமையாக இல்லாமல் ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கும்.
இதனை மறைக்க புருவங்களுக்கு மையினை தீட்டுவார்கள். ஆனால், இன்று ஒருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை அடர்த்தியாக ‘மைக்ரோபிளேடிங்’ மூலம் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்கிறார் சென்னை அண்ணாநகரில் உள்ள ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல்’ பயிற்சி மையத்தின் நிறுவனரான கன்னியம்மாள். இவர் மருத்துவர்கள், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அழகியல் பயிற்சியினை வழங்கி வருகிறார்.
‘‘அழகுக்கலையின் அட்வான்ஸ்டு வர்ஷன்தான் அழகியல். அழகுக்கலை மற்றும் அறிவியலை இணைத்து இயற்கையான முறையில் ஒருவரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றி அமைப்பது அழகியல். சருமத்தில் உள்ள கொலாஜனை ஊக்குவித்து சருமத்திற்கு புதுப்பொலிவினை அளிக்க இது உதவும். மேலும் தலை முடி வளர்ச்சிக்கும் இது நல்ல பலனை தரும். அதில் ஒன்றுதான் புருவங்களை அழகாக அமைப்பது. அதற்கான சிகிச்சை முறையினை ‘மைக்ரோபிளேடிங்’ என்று குறிப்பிடுவோம். இது செமிபர்மெனன்ட் மேக்கப் என்று சொல்லலாம். சின்னச் சின்ன பிளேட் போன்ற அமைப்பினைக் கொண்ட பிரஷ் மூலம் அழகான வடிவத்துடன் புருவங்களை அமைக்க முடியும்.
புருவங்கள் அடர்த்தியாக இல்லாத பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் மைக்ரோபிளேடிங் சிகிச்சை. வெளி நாடுகளில் 15 வருடங் களுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. ஆனால், இப்போதுதான் சென்னை போன்ற மொட்ரோ நகரங்களில் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள்தான் வெளிநாட்டிற்கு சென்று தங்களின் சருமம் முதல் புருவம் வரை அனைத்துக்குமான சிகிச்சையினை மேற்ெகாள்வார்கள். இன்று அதே சிகிச்சைகள் அனைவரும் பெறக்கூடிய அளவிற்கு அழகியல் துறை வளர்ந்துள்ளது’’ என்றவர், புருவங்களை அழகாக எடுத்துக்காட்டும் மைக்ரோபிளேடிங் குறித்து விவரித்தார்.
‘‘மைக்ரோபிளேடிங் செமிபர்மெனன்ட் மேக்கப் வகையில் வரும். அதாவது, குறிப்பிட்ட சில வருடங்கள் இது அப்படியே நிலைத்திருக்கும். பொதுவாக பெண்கள் தங்களின் புருவ அமைப்பு அடர்த்தியாகவும் வில் போல் வளைந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அந்த அமைப்பு அனைவரின் முகத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. மைக்ரோபிளேடிங் மூலம் ஒருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை அமைக்கலாம்.
இதனை ஒரு முறை செய்தால், ஐந்து வருடம் வரை அப்படியே இருக்கும். அதன் பிறகு அதன் நிறம் மங்கும். அந்த சமயம் மீண்டும் அதனை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சிலர் இதனை டாட்டூ என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் புருவங்களை டாட்டூ மூலமாக வரைந்து கொள்கிறார்கள். டாட்டூ நிரந்தரமானது. நாளடைவில் அதன் நிறம் பச்சையாக மாற வாய்ப்புள்ளது. பலருக்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. நிறம் மாறிய பிறகு அதை மாற்றி அமைக்கச் சொல்லி வருகிறார்கள்.
அவ்வாறு மாற்றி அமைப்பது அவ்வளவு எளிதல்ல. அதனை லேசர் சிகிச்சை மூலம்தான் அழிக்க முடியும். மைக்ரோபிளேடிங்கோ மற்றும் மைக்ரோ நீடிலிங் செய்யும் போது நம்முடைய புருவ நிறங்களுக்கு ஏற்ப இயற்கையான புருவம் போல் வடிவமைத்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் ஆசிய சரும நிறங்களுக்கு பிரவுன் நிறத்தில் புருவங்கள் அமைத்தால் அழகாக இருக்கும். கோக்கனட் பிரவுன், காஃபி பிரவுன் மற்றும் டார்க் பிரவுன் இந்த மூன்று நிறங்கள் ெதன்னிந்திய சரும நிறத்திற்கு அழகாக பொருந்தக்கூடியது. மேலும் ஒருவர் புருவ நிறத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். ஒருமுறை செய்தால் அதன் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
மைக்ரோபிளேடிங் செய்வது ரொம்பவே சிம்பில். முதல் முறை செய்யும் போதே பர்பெக்ட் அமைப்பினை தரும். அடுத்த முறை பிக்மென்டேஷன் மற்றும் தழும்பினை மறைப்பது போன்ற கரக் ஷன்கள் செய்தால் போதும். முதலில் ஒருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை மேப்பிங் செய்வோம். அதன் பிறகு அங்கு மைக்ரோபிளேட் பேனா மூலமாக பிக்மென்டேஷனை நிரப்புவோம். சிறிதாக கீறல்கள் ஏற்படுத்தி அதில் பிக்மென்டேஷனை நிரப்புவதால், இந்தக் காயம் ஆறுவதற்கு 48 மணி நேரமாகும். நான்கு வாரங்களில் முழுமையாக செட்டாகிவிடும். அதன் பிறகு பிக்மென்டேஷன் இல்லாத பகுதியில் மீண்டும் கரக்ஷன் செய்தால் போதும்.
காயம் ஆற நாங்க பரிந்துரைக்கும் ஆயின்ட்மென்ட் மருந்துகளையும் கொடுத்திடுவோம். அதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து பார்க்கும் போது மைக்ரோபிளேடிங் செய்தது போல் இல்லாமல் உங்களின் உண்மையான புருவம் போல் இருக்கும். சிலருக்கு புருவத்தில் சின்னதாக காயம் ஏற்பட்டிருக்கும். அங்கு புருவங்கள் வளராமல் இருக்கும். அந்த இடத்தினை மைக்ரோபிளேடிங் கொண்டு சரி செய்து கொள்ளலாம்.
மேலும் புருவத்தில் முடியே இல்லை என்றாலும் அவர்களின் முக அமைப்பிற்கு ஏற்ப அதை சரி செய்ய முடியும். அப்படிப்பட்ட அட்வான்ஸ்டு சிகிச்சைதான் மைக்ரோபிளேடிங். இந்த சிகிச்சையினை முறையாக பயின்ற அல்லது அதற்கான தனிப்பட்ட கிளினிக்கில் செய்வது அவசியம்.மைக்ரோபிளேடிங் செய்ய பயன்படுத்தப்படும் கருவி பேனா போன்ற அமைப்பில் இருக்கும். அதன் நுனியில் சுமார் மெல்லிய ஊசிகளில் பிரஷ் ேபான்ற அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
அதைக் கொண்டு புருவ பகுதியினை கீறி அங்கு பிக்மென்டேஷனை நிரப்புவோம். அதாவது, பெயின்ட் செய்யும் போது எவ்வாறு பிரஷ் நுனியில் நிறங்களை நனைத்து ெபயின்ட் செய்வோமோ அதேபோல் பிக்மென்டேஷன் பிளேடின் நுனியில் தொட்டு அதை புருவ பகுதியில் நிரப்புவோம். பிக்மென்டேஷன் என்பது மை அல்லது இங்க். இதனை செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இந்த பிளேடுகள் இரண்டு வகையுண்டு. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் இரும்பு. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேடுகளை பயன்படுத்தினால் இன்பெக்ஷன் ஆகாது. துருப்பிடிக்காது. ஆனால், அதுவே இரும்பில் இருக்கும் பிளேடுகளை பயன்படுத்தினால், அதில் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது.
அதில் சிகிச்சை மேற்ெகாள்ளும் போது இன்பெக்ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிளேடு கொண்டு செய்யும் போது ஒருவரின் புருவ வடிவம் எவ்வாறு இருக்கிறதோ அதற்கேற்ப புருவ முடிகளை இயற்கையாக இருப்பது போன்று ஸ்ட்ரோக்கில் அமைக்க முடியும். பார்க்க 100% இயற்கை புருவ முடிகள் போல் இருக்கும். புருவங்களை அடர்த்தியாக மட்டுமில்லாமல் நீளத்தினை அதிகரிக்கவும் செய்யலாம். மேலும் இது செய்த பிறகு ஐந்து நாட்கள் முகத்திற்கு எந்தவித மேக்கப் பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. முகத்தினை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வெட் டிஷ்யு கொண்டுதான் துடைக்க வேண்டும். சோப் கொண்டு கழுவக்கூடாது. முதலில் பார்க்கும் போது அடர்ந்த நிறங்களில் இருப்பது போல் தெரியும். இரண்டு நாளில் இயற்கையான புருவம் போல் காட்சியளிக்கும்.
புருவமே இல்லாதவர்களுக்கு மைக்ரோபிளேடிங் சரியான சாய்ஸ். ஆனால், புருவம் அடர்த்தியாக இல்லாமல் இடைவெளி இருப்பவர்களுக்கு மைக்ரோநீடிலிங் செய்யலாம். அதாவது, புருவ இடைவெளியை நிரப்ப மைக்ரோநீடிலிங் பயன்படும். டயபெட்டிக் நோயாளிகள் பொறுத்தவரை அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா என்று ஆய்வு செய்த பிறகே செய்ய வேண்டும். இன்சுலின் எடுப்பவர்களுக்கு இதை செய்யவே கூடாது. காரணம், அவர்களுக்கு காயங்கள் எளிதில் ஆறாது. அதனால் ரிஸ்க் எடுக்க முடியாது. இந்த சிகிச்சையினை முறையாக பயின்று சான்றிதழ் மற்றும் அதற்கான டிரெயினிங் எடுத்தவர்களிடம் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார் கன்னியம்மாள்.
தொகுப்பு: ரிதி
