×

சமூக விழிப்புணர்வும், அரசுப் பணியும் இரு கண்கள்!

நன்றி குங்குமம் தோழி

வில்லுப்பாடல், பொம்ம லாட்டம் மூலம் பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்துபவர் மட்டுமின்றி பேச்சாளர், எழுத்தாளர், அரசுப் பணியாளர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்தான் கோமதி கிருஷ்ணமூர்த்தி. அண்மையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்வில் அவரை சந்தித்த போது…

‘‘திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர்தான் என்னுடைய பூர்வீகம். என் பெற்றோர் இருவரும் சுக்கு காபிப் பொடி விற்பனை செய்து வந்தனர். அந்த எளிய சூழலிலும் என்னை தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தார்கள். நான் தாலையூத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய ஆசிரியர் சுப்புலட்சுமி அம்மாதான் எனக்கு ஊக்கம் கொடுத்து என்னை பேச்சுப் போட்டியில் மேடை ஏற்றினார். அதுநாள் வரை என்னாலும் பேச முடியும் என்று எனக்குத் ெதரியாது. மேடையில் ஒரு பதற்றத்துடன்தான் பேசினேன். அதில் இரண்டாவது பரிசினை வென்றேன். அந்தப் பரிசு எனக்கு மேலும் ஒரு ஊக்கத்தை கொடுத்தது.

என்னுடைய முதல் பரிசினை நான் வீட்டில் காண்பித்த அந்த தருணம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அதன் பிறகு, நான் ஏறிய ஒவ்வொரு மேடையும், எனக்கு ஒரு பாடத்தை கற்றுத்தந்தது. இன்னும் சொல்லப்போனால் எனது முதல் காதல் ‘மைக்’ என்றுதான் சொல்வேன். எனக்குள் இருந்த திறமையை எனக்கு அடையாளம் காட்டியதும் இந்த மேடைதான். இன்று நான் பல மேடைகளில் துணிச்சலாகப் பேசுவதற்கும் அன்று விழுந்த முதல் விதைதான் காரணம்.

ஆசிரியர்களின் ஊக்கத்தால் பேச்சுப் போட்டிகளில் மாநில அளவிலும் சாதித்தேன். 10ம் வகுப்பு வரை அங்கு படித்தேன். அதன் பின் குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொண்டு நான் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். கல்லூரியில் வேதியியல் துறையில் சேர்ந்தேன். அதில் சிறந்த மாணவி என்ற விருதினை பெற்றேன்’’ என்றவர், 2013ல் TNPSC க்ரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்று தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார்.

‘‘2013ம் ஆண்டு எனது குழந்தைக்கு ஆறு மாதம் இருந்த போது ஒரு முயற்சிக்காக நான் TNPSC தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவேன் என்று நான் நினைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன். 2014ல் பணி இடமாறுதல் பெற்று திருநெல்வேலிக்கு வந்தேன். தட்டச்சராகத் தொடங்கிய எனது பயணம், பதவி உயர்வின் மூலம் வருவாய் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக உயர்ந்துள்ளது. அந்த சமயத்தில்தான் கிராமத்தில் உள்ள மக்கள் பல்வேறு கலைகளை மிகவும் ரசித்துக் கேட்பதைக் கண்டேன். ஒரு விஷயத்தைச் சாதாரணமாகச் சொல்வதைவிட, இசை கலந்து சொல்லும்போது, அது அப்படியே மனதில் பதிந்து விடும்.

ரசனையோடு கருத்துகளைக் கொண்டு சேர்க்கும்போது கிடைக்கும் அந்த ஈர்ப்பும், மாற்றமும் பாரம்பரிய கலை வடிவங்களை நான் தேர்ந்தெடுக்ககாரணம். சமூகக் கருத்துகள் வேகமாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். நான் தொழில் முறையாகக் கிராமியக் கலைகளை பயின்றவள் அல்ல. அதன் நுணுக்கங்கள் எனக்கு பெரிய அளவில் தெரியாது. இருப்பினும், மக்களிடம் ஒரு தகவலை எனக்குத் தெரிந்த கலைத் திறனை வைத்து விழிப்புணர்வு பரப்ப நினைத்தேன்.

அரசுப் பணியில் சேர்ந்த பின், நாம் பகிரும் சிறு தகவல் கூட, வாழ்வையே மாற்றும் என்பதை உணர்ந்தேன். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘வில்லுப்பாட்டு’ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது எனக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. முக்கூடல் கிராமத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய போது குழந்தைத் திருமணம் தடுத்தல், நதி பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்துத் தீவிரமாகப் பணியாற்றினேன். இப்பணிகளை நான் தனி ஆளாகச் செய்யவில்லை.

என்னுடன் சில தொண்டு நிறுவனங்கள், சமூக தன்னார்வலர்களும் கை கோர்த்தனர். இத்தகைய கூட்டு முயற்சியால் என்னால் பல மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. நாம் தரும் விழிப்புணர்வுத் தகவல் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தையாவது உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சமூக விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்’’ என்றவர்,
19 பெண்களை இணைத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் செய்துள்ளார்.

‘‘ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் சொந்த வாய்ப்பினையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவரை இரண்டு கவிதை புத்தகங்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன். என் காயங்களுக்கு மருந்தாகவும், மனதிற்கு ஆறுதலாகவும் இந்த எழுத்துப் பயணம் அமைந்தது. மனதின் ஆழமான உணர்ச்சிகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் ேபாது நிம்மதியை தந்தது. கோபம், கவலை, அன்பு போன்ற வாழ்வியலின் யதார்த்தமான உணர்வுகளே எனது படைப்புகளின் முக்கியமான மையக் கருத்து. ஆரம்பத்தில் எழுதத் தெரியாவிட்டாலும், வாழ்வின் சவால்களைச் சாதனைகளாக மாற்ற தமிழ் எனக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை என்பது ஒரு சரிவிகித உணவு. எதிலும் அளவு கூடவோ குறையவோ கூடாது. அரசுப்பணி என்னுடைய அடையாளம். எழுத்துகள் எனக்குச் சமூகம் தரும் அங்கீகாரம். மேடைப் பேச்சு எனது மனதிற்கான வடிகால். இவற்றுடன் குடும்பம் எனும் அச்சாணியையும் சேர்த்து நான்கையும் நான் சமநிலையுடன் கையாள்கிறேன். அதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கும் அடிப்படை.

பெண்கள் எந்தச் சூழலிலும், தங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளக்கூடாது. சமூகம் தரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு தயங்காமல், உங்கள் திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கற்ற கல்வியும், உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் உங்களை பாதுகாக்கும் கேடயங்கள். ஒரு பெண் உறுதியாக இருந்தால், அவளைப் பார்த்து அந்தக் குடும்பமே முன்னேறும்.

மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக காத்திருக்காமல், உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள். தோல்விகளால் உடைந்து போகாமல், உங்களைத் தட்டி எழுப்பும் சக்தியாக மாறுங்கள். துணிச்சலோடு செயல்பட்டால் எந்தத் தடையையும் நம்மால் உடைக்க முடியும்’’ என்ற கோமதி கிருஷ்ணமூர்த்தி இளம் பாரதி, நம்பிக்கை தமிழச்சி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

 

Tags : Kumkumam ,
× RELATED இன்றைய வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் வேண்டும்!