நன்றி குங்குமம் தோழி
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கிவிட்டனர். குழந்தைகளின் எதிர்கால வளமைக்கு தேவையான அனைத்து திறன்களையும் தேடித்தேடி தருகின்றனர். குறிப்பாக கோடை கால விடுமுறை வந்துவிட்டால் போதும், பெற்றோர்கள் திறன் பயிற்சி நிறுவனங்களை முந்தியடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். விடுமுறையில் விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இது போன்ற திறன் பயிற்சிகள் சலிப்பை உண்டாக்கினாலும் தங்கள் குறைகளை சரிசெய்து கொள்ளவும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இந்தக் கோடை கால வகுப்புகள் பயன்படும் என்று பெற்றோர் நம்புகின்றனர்.
முன்பெல்லாம் பயிற்சி நிறுவனங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஆன்லைன் வகுப்புகள் வந்துவிட்டதால் கோடை வெயிலிலும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே வகுப்புகளை தேர்வு செய்து கற்றுக்கொள்ள முடிகிறது. பல திறன் பயிற்சிகள் இருந்தாலும், கோடை வகுப்புகளில் பெற்றோரின் முதன்மை தேடலாக இருப்பது கையெழுத்து திறன் பயிற்சியாகத்தான் உள்ளது.
பெரும்பாலான பெற்றோர்களின் முதன்மை கவலை தங்கள் குழந்தைகளின் கையெழுத்து. சில குழந்தைகள் நன்றாக படித்தாலும் கையெழுத்து கோழிக் கிறுக்கலாகவே இருக்கும். “குழந்தைகளின் கையெழுத்து சரியில்லை என்றால் அது அவர்களின் கற்றலையும் பாதிக்கும். அது ஒழுக்கத்தின் அளவுகோலாகவும் பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள், கையெழுத்து பயிற்சி ஏடுகளின் மூலம் மாணவர்களின் கையெழுத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பல முயற்சிகளை செய்தாலும் மாணவர்களின் கவனக்குறைவால் அது முடியாத காரியமாகவே உள்ளது.
எங்கள் AJ அகாடமி கையெழுத்து வகுப்பில் பத்து நாட்களிலேயே அழகான கையெழுத்தைக் கொண்டு வர முடியும்’’ என்று உறுதியாக கூறுகிறார் ஹாண்ட் ரைட்டிங் பயிற்சியாளர் மாலினி சரவணன். இவர் ஆன்லைனில் கையெழுத்து மற்றும் அனைத்து மொழி சார்ந்த வகுப்புகளையும் நடத்துகிறார். “நான் சிவகாசி பொண்ணு. இளங்கலையில் ஆங்கிலம் டிகிரி முடிச்சேன். 2008ல் திருமணம் ஆகி சென்னைக்கு வந்தேன். 15 வருடங்கள் குழந்தைகள், குடும்பம்னே காலம் போச்சு. கணவர் ஐ.டி துறையில் சொந்தமாக பிசினஸ் செய்கிறார். என் குடும்பத்தில் பெண்கள் யாருமே வேலைக்கு போனதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படல. நான் இன்று ஒரு பயிற்சியாளராக இருக்க என் மகள்தான் காரணம்.
அவள் அன்று சொன்ன அந்த விஷயம் என்னை பெரிய அளவில் பாதிச்சது. அவளுக்கு மூன்று வயசு இருக்கும் போது, நான் அவளிடம் ‘நல்லா படிக்கணும். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளணும்’னு சொன்னேன். ஆனால், அவள் அதற்கு, ‘கற்றுக் கொண்டு என்ன செய்வது. நானும் பாட்டி மற்றும் உங்கள போல வீட்டில் தானே இருக்கணும்’ என்றாள். அவள் சொன்ன அந்த வார்த்தைகளால் என்னால் தூங்கவே முடியல.
நான் என் மகளுக்கு தவறான உதாரணமாக இருக்கிறேன்னு புரிஞ்சது. அப்பதான் நானும் எதாவது செய்யணும். என்னைப் பார்த்து என் குழந்தைகள் முன்னேறணும்னு தோணுச்சு. என் கணவர், பசங்கள பாத்துக்கிட்டே எது வேண்டுமானாலும் செய். நான் சப்போர்ட் பண்றனு சொன்னார். உடனே எல்லா பெண்களைப் போல எனக்கு டெய்லரிங்தான் முதல் யோசனையாக வந்தது.
அதை பயின்றேன்’’ என்றவர், தன் பயிற்சி நிறுவனம் குறித்த செய்திகளை மகிழ்வுடன் பகிர்கிறார்.“தையல் கற்றுக்கொண்டதால், என் மகளுக்கான உடைகளை நான் தைத்து தர ஆரம்பித்தேன். அவளின் உடைகளை பார்த்து பலரும் தையலுக்கான பயிற்சி அளிக்க சொல்லி கேட்டாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன். அதற்கு நான் வாங்கிய சம்பளம் 500 ரூபாய். தைப்பதை விட சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடிச்சது. அது எனக்கு மனத் திருப்தியை கொடுத்தது.
ஆனால், இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், என்னால் தொடர்ந்து தையல் வேலையில் ஈடுபட முடியவில்லை. கழுத்துவலி, இடுப்பு வலியால் அவதிப்பட்டேன். இது குறித்து என் மகனிடம் பேசிக் கொண்டு இருந்த போது, அவன், ‘அம்மா உங்க கையெழுத்து அழகாக இருக்கு. நீங்க கையெழுத்து வகுப்பு எடுக்கலாமே’ என்றான். முதலில் எங்களின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரண்டு பசங்க பயிற்சிக்காக வந்தாங்க. அப்படித்தான் என் பசங்களின் பெயரில் 2022ல் AJ அகாடமியை ஆரம்பித்தேன்.
கையெழுத்து பயிற்சியாளராக இருக்க அழகான கையெழுத்து மட்டும் போதாது என்பதால் அதை முறையாக பயிற்சி பெற நினைத்தேன். மேடவாக்கத்தில் கையெழுத்துக்கான அகாடமியில் பயிற்சி பெற்றேன். அங்கு பிரின்ட், கர்சிவ், லுசிடா, தமிழ் என நான்கு லெவல் பயிற்சிகள் இருந்தன. எல்லாவற்றையும் பயின்றேன். அதற்கான பயிற்சி புத்தகங்களும் அவர்கள் கொடுத்தார்கள். அங்கு எனக்கு பயிற்சி அளித்த அருள் என்னை மேலும் ஊக்குவித்தார்.
அதன் பிறகு எங்க குடியிருப்புக்கான தனிப்பட்ட வாட்ஸப் க்ரூப்பில் கையெழுத்து பயிற்சி அளிப்பது குறித்து வெளியிட்டேன். அன்றிரவே 12 மாணவர்கள் சேர்ந்தார்கள். தற்போது அருளுடன் இணைந்து என்னுடைய அகாடமியை நடத்தி வருகிறேன். என் கணவர் எங்கள் அகாடமிக்கான இணைய பக்கத்தினை வடிவமைத்துக் கொடுத்தார். எனக்கு அப்போது கணினி அறிவோ, ஆங்கில புலமையோ கிடையாது. ஆனால், இன்று வெளிநாட்டுக் குழந்தைகளுக்கும் கையெழுத்து பயிற்சி அளிக்கும் அளவிற்கு என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்றவர், ஆசிரியர் பயிற்சியையும் முடித்துள்ளார்.
‘‘என்னை ஒரு வுமன் ஃபோரூமில் இணைத்துக் கொண்டேன். இந்தக் குழுவில் நிறைய பெண் தொழிற்முனைவோர்கள், பல்வேறு துறைகளை சார்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுடன் பயணித்த போதுதான் எனக்கான ஆங்கிலப் புலமை வளர்ந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் தொடர்பும் கிடைத்தது. எனக்கு தமிழ்மொழி தெரியும் என்பதால், குழுவில் உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுத் தர கேட்டனர்.
அதைத் தொடர்ந்து அகாடமியில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தோம். மேலும், ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, ஸ்பானிஷ், கொரியன், ஜப்பானிஸ் போன்ற மொழிகளும், அடிப்படை கணிதம், ஃபோனிக்ஸ் மற்றும் அபாகஸ் வகுப்புகளும் எடுக்கிறோம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், என்னால் மட்டுமே அனைத்து வகுப்புகளும் எடுக்க முடியவில்லை. தனிப்பட்ட ஆசிரியர்களை நியமிக்க விரும்பினேன். விரும்பியவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கினேன். இப்போது அவர்களும் என்னுடைய அகாடமியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். தற்போது என் சகோதரி உட்பட 10 பெண்கள் ஆசிரியர்களாக உள்ளனர்’’ என்றவர், இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையெழுத்து மற்றும் மொழி வகுப்புகளை எடுத்துள்ளார்.
‘‘எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் வளர்ச்சியை பத்து நாட்களிலேயே பார்க்கலாம். நேரடி வகுப்புகளை விட ஆன்லைன் வகுப்புகள் சவாலானவை. மாணவர்கள் கவனிப்பது போல் தெரியும் ஆனால், வேறு ஏதாவதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களை அடிக்கடி ஸ்கிரீனை ஷேர் செய்ய சொல்வேன். இன்றைய மாணவர்களிடம் அதீத தொழிற்நுட்ப அறிவு உள்ளதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆங்கில மொழிக்கு ஃபிளாஷ்கார்டுகள் இருக்கும். ஆனால், தமிழ் எழுத்துகளுக்கு இல்லை என்பதால், அதனை நானே தயார் செய்தேன். அதன் மூலம் சொல்லித் தரும் போது மாணவர்களால் எளிதில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
வெளிநாட்டில் இருந்தும் மாணவர்கள் பயற்சி எடுப்பதால், அவர்களின் நேரத்திற்கு ஏற்ப நான் என்னுடைய நேரத்தை பிரித்துக் கொள்வேன். விடியற் காலை 3.30 மணிக்கு துவங்கி இரவு 10.30 வரை பல்வேறு கால இடைவெளியில் வகுப்புகள் நடக்கும். வகுப்பின் இடைவேளை நேரத்தில் என் குடும்ப வேலைகளை பார்த்துக் கொள்வேன். பிரம்மமுகூர்த்த வேளையில் பாடங்கள் நடத்துவதால் என்னவோ எல்லாமே நன்றாக நடப்பதாக நம்புகிறேன்.
காலமும் அதற்கான பரிசுகளை தந்து கொண்டிருக்கிறது. என்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும். தற்போது ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளித்து வருகிறேன். நேரடி வகுப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். திட்டமிடாது சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் என் குழந்தைகளால் எனக்கொரு பாதை உருவானது. அதில் எல்லோரையும் உயர்த்திட பயணிக்கிறேன்’’ என்கிறார் மாலினி சரவணன்.
தொகுப்பு: கலைச்செல்வி
