×

போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது

வாஷிங்டன்: தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போரை முடிவுக் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. வருகின்ற 8ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களுடனான கலந்துரையாடலின்போது பேசிய அதிபர் டிரம்ப், \”ராணுவ நடவடிக்கை மூலம் ஈரானின் திறன்கள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது. அவர்களின் டிரோன் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் சுமார் 82சதவீதம் குறைந்துவிட்டது. அவர்களின் ஏவுகணை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஏவுகணைத் தொழிற்சாலைகள் ஏறக்குறைய 90சதவீதம் முடங்கிவிட்டன. அவர்களின் அணுசக்தி திறனை நாங்கள் முழுமையாக அழித்துவிட்டோம். ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையின் விளைவாக ஈரானிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

எண்ணெய் விற்பனை மூலம் அவர்களுக்கு எந்த வருவாயும் கிடைப்பதில்லை. இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு துடித்துக்கொண்டு இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளின் நிலை குறிப்பிட்ட சிறிய குழுவிற்கு மட்டுமே தெரியும். எனக்கும் வேறு சிலருக்கும் தவிர அந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் வேறு யாருக்கும் தெரியாது” என்றார். ஈரான் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட உயர் தலைவர் மொஜ்தபா காமெனியின் அறிக்கையில்,நிலையற்ற ஒரு போர் நிறுத்தத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு பரந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், வான்வழித் தாக்குதல்கள் மூலமாகவும் அதிபர் டிரம்ப் குறைக்க முயன்ற ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை பாதுகாப்பதற்கு ஈரான் உறுதியாக உள்ளது” என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற ஒப்புதலை தவிர்க்க டிரம்ப் முயற்சி
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் 60 நாட்களுக்குள் அதை முடிக்க வேண்டும். 60 நாட்களை கடந்தால் அந்த போரை தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கி நேற்றுடன் 60 நாட்களாகி விட்டது. அதனால் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் உள்ளார். நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டிய நெருக்கடியை தவிர்க்க, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய வாதத்தை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அவை தலைவர் மைக் ஜான்சன் கூறுகையில், ‘தற்போது குண்டுவீச்சுகளோ அல்லது நேரடி ராணுவ நடவடிக்கைகளோ நடக்கவில்லை.. நாங்கள் அமைதியை ஏற்படுத்தவே முயல்கிறோம், அதனால் இது போர் அல்ல’ என்று புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். அதேபோல டிரம்ப் அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத், ‘தற்போது போர்நிறுத்தம்தான் அமலில் இருக்கிறது. எனவே, அந்த காலகட்டத்தையும் 60 நாள் காலக்கெடுவுடன் சேர்க்க முடியாது’ என்றார். இதன் மூலம் நாடாளுமன்ற அனுமதிக்கான காலக்கெடுவை தள்ளிப்போட அவர்கள் திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன.

Tags : Iran ,Washington ,President Trump ,United States ,Israel ,
× RELATED வங்கதேசத்தினர் பற்றிய அசாம் முதல்வர்...