- எங்களுக்கு
- ஈரான்
- பரம முதல்வர்
- துபாய்
- மொஜ்தபா காமெனி
- ஐக்கிய மாநிலங்கள்
- அமெரிக்க அதிபர் டிரம்ப்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- மேற்கு ஆசியா
துபாய்: தொடர் மிரட்டலால் அதிருப்தி அடைந்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா இல்லாத எதிர்காலம் உருவாக்கப்படும் என்று எச்சரித்தார். மேற்காசியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் போர்நிறுத்தத்தை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பரந்த ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை ஒரு தேசிய சொத்தாக பாதுகாக்கும் என்று அந்நாட்டின் உச்ச தலைவர் தெரிவித்தார்.
1622 ம் ஆண்டு ஹோர்முஸ் ஜலசந்தியில் இருந்து போர்த்துக்கீசிய படைகள் வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் தேசிய பாரசீக வளைகுடா தினத்தை முன்னிட்டு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கை ஈரான் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியதாவது: இறைவனின் உதவியாலும் சக்தியாலும், பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஒளிமயமான எதிர்காலம் என்பது அமெரிக்கா இல்லாத ஒரு எதிர்காலமாக, அதன் மக்களின் முன்னேற்றம், வசதி மற்றும் செழிப்புக்கு சேவை செய்யும் ஒன்றாக அமையும்.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள நமது அண்டை நாடுகளுக்கும் நமக்கும் ஒரு பொதுவான தலைவிதி உள்ளது. ஆயிரக்கணக்கான கிமீ தொலைவிலிருந்து வந்து பேராசையுடனும் வன்மத்துடனும் செயல்படும் வெளிநாட்டினருக்கு, அதன் ஆழ்கடலின் அடியில் தவிர, வேறு எங்கும் இடமில்லை.
நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 9 கோடி பெருமையும் கண்ணியமும் வாய்ந்த ஈரானியர்கள், நானோ தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் முதல் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்கள் வரை ஈரானின் அடையாளம் சார்ந்த, ஆன்மீக, மனித, அறிவியல், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் அனைத்தையும் தேசிய சொத்துக்களாகக் கருதுகின்றனர்.
மேலும், அவர்கள் நாட்டின் நீர்நிலைகள், நிலம் மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதைப் போலவே இவற்றையும் பாதுகாப்பார்கள். பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் எதிர்காலம் அமெரிக்கா அற்ற ஒரு எதிர்காலமாக அமையும். அது இப்பகுதி மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக அமையும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
* ரஷ்யா எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான சண்டை மீண்டும் தொடங்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷகோவ் கூறுகையில், டிரம்புடன் பேசுகையில் ஈரான் விவகாரத்தை புடின் எழுப்பினார். மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்குவது ஆபத்தானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக ஈரானிய மண்ணில் எந்தவொரு தரைவழி நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
* புடினுடன் டிரம்ப் பேச்சு
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டங்களை ஈரான் முன்வைத்துள்ள நிலையில் அதை அமெரிக்க அதிபர் நிராகரித்துள்ளார். இதனால் சர்வதேச எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் விஷயத்தில் உதவுவதாக ரஷ்ய அதிபர் முன்வந்ததாகக் கூறியுள்ளார்.
* அமெரிக்கா செல்லும் போர் கப்பல்
ஈரானுடன் நடந்த போரின் போது உலகின் மிக பெரிய போர் கப்பல் யுஎஸ்எஸ் போர்டு கடற்படை கப்பல் மத்திய தரைக்கடல், சூயஸ் கால்வாய், செங்கடல் போன்ற இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த கப்பல் இந்த மாதத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பி செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட போது யுஎஸ்எஸ் போர்டு கப்பல் வெனிசுலா கடல் பகுதியில் இருந்தது. மேற்காசிய போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தது. தொடர்ந்து 300 நாள் கடலில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட அந்த கப்பல் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்புகிறது. ஏற்கனவே,ஜார்ஜ் புஷ், ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட கப்பல்கள் மேற்காசிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* ஹார்முஸ் ஜலசந்திக்கு தன் பெயரை சூட்டிய டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை ‘டிரம்ப் ஜலசந்தி என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் கேலியான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
