×

ஹார்முஸ் ஜலசந்திக்கு தன் பெயரை அதிரடியாக சூட்டிய டிரம்ப்; வரைபடத்தால் பரபரப்பு

 

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதன் காரணமாக எரிசக்தி விநியோக தடைகளால் உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்க ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை ‘டிரம்ப் ஜலசந்தி என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் கேலியான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது. இது, பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகும். மிகவும் குறுகியதாகும். அதன் பகுதி, 33 கி.மீ. அகலம் மட்டுமே உள்ளது. அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ., தூரம் மட்டுமே. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. ஹார்முஸ் என்ற பெயர், அப்பகுதியில் 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான ஹார்முஸ் நகரிலிருந்து உருவானது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Trump ,Strait of Hormuz ,Washington ,US ,Israel ,Iran ,
× RELATED சீன தலைநகரில் ட்ரோன் விற்பனை செய்ய...