சேலத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

சேலம், பிப். 23: சேலத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சேலத்தில், அம்மாப்பேட்டை மண்டலம், வாய்க்கால் பட்டறை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால், தெருநாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில், தெரு நாய்களை பாதுகாப்பாக பிடித்து வந்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, நோய் எதிர்ப்பு மருந்து (ஆண்டிபயாடிக்) மற்றும் ஆண்டி ராபிஸ் தடுப்பூசி செலுத்தி ஏழு நாட்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் கொடுத்து, கருத்தடை செய்த விலங்கு என அடையாளமிட்டு பிடித்த இடத்திலேயே கொண்டுவிடப்படும் வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் பிடித்து வரப்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். அப்போது  அவர் கூறுகையில், ‘‘நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாதம் ஒன்றுக்கு 300 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சையினை கேர் டிரஸ்ட் தொண்டு நிறுவன மருத்துவர் ஜெயகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வழங்குவர். இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை குறையும், என்றார். அப்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் சண்முகவடிவேல், சுகாதார அலுவலர்கள் மாணிக்கவாசகம், விலங்கின ஆர்வலர்கள் வித்யாலஷ்மி, பிரதீஷன், ஜெயச்சந்திரன், சுபியான் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories:

>