ஐதராபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் விளாசியது. ஐபிஎல் 19வது தொடரின் 21வது போட்டி ஐதராபாத்தில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். அவரைத் தொடர்ந்து ஹெட், 7வது ஓவரில் 18 ரன்னில் அவுட்டானார். அதன் பின் இணை சேர்ந்த கேப்டன் இஷான் கிஷண், ஹென்றிச் கிளாசன் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
44 பந்துகளில் 91 ரன்கள் விளாசிய இஷான் கிஷண் (91 ரன்), சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹென்றிச் கிளாசன் (26 பந்து, 3 சிக்சர், 1 பவுண்டரி, 40 ரன்), துஷார் தேஷ்பாண்டே வீசிய 16வது ஓவரில், ரியான் பராக்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின், நிதிஷ் குமார் ரெட்டி, சலீல் அரோரா இணை சேர்ந்து ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதிஷ் குமார், 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய பின் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் அனிகேத் வர்மா (6 ரன்) ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் விளாசியிருந்தது. அந்த அணியின் சலீல் அரோரா 24 ன்னுடனும், ஹர்ஷ் தூபே ரன் எடுக்காமலும், களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் வீரர்கள் களமிறங்கினர்.
ரன் மெஷின் இஷான்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷண், நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அதிரடி காட்டியிருந்தார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடி ரன் வேட்டையாடிய இஷான் கிஷண், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். அதில், 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இஷான் கிஷணின் அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தீப் சர்மா வீசிய 14வது ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து இஷான் கிஷண் ஆட்டமிழந்தார். இருப்பினும், 44 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 91 ரன்களை அவர் விளாசியதால், அணியின் ரன் ரேட் 10.59 ஆக உயர்ந்தது.
முதல் பந்தில் அவுட்;அபிஷேக் அதிர்ச்சி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, ஐதராபாத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில், ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கு முன், கடந்த 5ம் தேதி ஐதராபாத்தில் நடந்த, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் முகம்மது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சொந்த ஊரான ஐதராபாத்தில் நடந்த கடைசி இரு போட்டிகளிலும் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தது, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
சிஎஸ்கே குஜராத் போட்டி சென்னைக்கு மாற்றம்: புதுடெல்லி: ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையிலான 37வது டி20 போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம், அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அப்போட்டி, அதே நாளில் சென்னையில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக, மே 21ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த, 66வது டி20 போட்டி, அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
