ஊத்துக்கோட்டை, ஏப்.14: பெரியபாளையம் பகுதியில் வடமாநில வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் பஜார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மர பர்னிச்சர் கடை உள்ளது. இந்தக்கடையில் சுமார் 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கடையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சிலர் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் திலீப்குமார் (33) என்பவரை, நந்திகிஷோர் (32) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது திலீப்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது திலீப்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீசார் திலீப்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சக தொழிலாளி நந்திகிஷோரை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெரியபாளையம் போலீசார் நந்திகிஷோரை பனைஞ்சேரி பகுதியில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நந்திகிஷோர் வாக்குமூலத்தில் கூறியதாவது, தினமும் நான் சமையல் செய்வேன். சம்பவம் நடந்த அன்று திலீப்குமாரை சமையல் செய்ய சொன்னேன். அவன் என்னால் செய்ய முடியாது நீதான் சமையல் செய்பவன் என என்னை கிண்டல் செய்தான். அதனால் ஆத்திரமடைந்த நான் அவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்தினேன் என கூறினான். இச்சம்பவத்தால் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
