×

திருத்தணி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் பாதிப்பு

திருத்தணி, ஏப்.13: திருத்தணி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்ல வாகனங்கள் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் தேக்கமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை பட்டத்திற்கு நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 பகுதிகளில் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேலஞ்சேரி, திருத்தணி, கே.ஜி.கண்டிகை, கொண்டாபுரம், பெரியராமாபுரம், வீரமங்கலம்,
பொம்மராஜுபேட்டை, வடகுப்பம், நொச்சிலி ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 900 நெல் மூட்டைகள் ஊழியர்கள் பிடித்து தேக்கி வைக்கின்றனர். இருப்பினும் நுகர்பொருள் வாணிக கழகம் சார்பில் வணிக கிடங்குக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரிகள் முறையாக அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கிடங்குகள் நிரம்பி நெல் மூட்டைகள் திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் 10 நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி நிற்பதால் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 3,000 ஆயிரம் முதல் 6,000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் அனுப்பி வருகிறோம். விரைவில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் திருவள்ளூரில் இருந்து வெகு தூரத்தில் உள்ள பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி போன்ற பகுதிகளுக்கு லாரிகள் அனுப்புவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Tiruttani ,Tiruvallur district ,Navari ,Pattam.… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தபால்...