திருவள்ளூர், ஏப்.14: திருவள்ளூர் மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 தேர்தல் ஆணையத்தின் நடைமுறையின்படி, தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் 40% சதவீதத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம், படிவம் 12டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள 4083 வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்கு பதிவு செய்திட திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பகுதி வாரியாக 87 அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவானது, ஏற்கனவே பகுதி வாரியாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலுடன், இந்த குழுவானது வாக்காளர் 12டி படிவத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு, செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளவாறு வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 12டி விண்ணப்பம் அளித்து தபால் வாக்கு செலுத்திட விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதிற்குமேல் உள்ள மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், படிவம் 12டி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்குமாறும், அவர்கள் வீட்டிற்கு வருகை தரும் குழுவினரிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை காண்பித்து, தபால் வாக்குச்சீட்டை பெற்று, எவருடைய வற்புறுத்தலுமின்றி வாக்கினை பதிவு செய்து அங்கே கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும்.
இந்த, வசதியை பெறுவதில் தகவல் ஏதேனும் தேவைப்படின் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்:1800-425-8515, வாட்ஸ்ஆப் எண்:7305158550 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று எற்கனவே மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர் குழுக்கள் சென்று வாக்கு செலுத்திய பின் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த தபால் ஓட்டுகள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாதவரம் கம்பர் நகர் லட்சுமி தெருவில் முதியவர் ஒருவர் தபால் ஓட்டை செலுத்தினார். பின்னர், தேர்தல் பணியாளர்கள் தேர்தல் வாக்கு பெட்டியை எடுத்து சென்றனர்.
