நாசிக்: இளம் பெண் ஊழியர்களை குறிவைத்து நான்கு ஆண்டுகளாக அரங்கேறிய பாலியல் பலாத்காரம் மற்றும் மதமாற்ற கொடுமைகள் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிபிஓ தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இளம் பெண் ஊழியர்களை குறிவைத்து மேலாளர்கள் மற்றும் உயர் அதி காரிகள் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்தும், மதமாற்றம் செய்ய சொல்லி மூளைச்சலவை செய்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கடந்த மார்ச் 26ம் தேதி தியோலாலி போலீஸ் நிலையத்தில் முதல் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் தொடக்கத்தில் மும்பை நாகா போலீஸ் நிலையத்தில் ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மேலும் எட்டு பேர் புகார் அளித்தனர். தற்போது இந்த வழக்கில் நாசிக் போலீசார் டீம் லீடர்கள் மற்றும் மனிதவள நிர்வாகி உள்ளிட்ட ஏழு ஊழியர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒன்பது எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. புகார் கிடைத்தவுடன் துரிதமாக செயல்பட்ட நாசிக் போலீசாரை பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்தார்.
