×

வரும் 16ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: புதிய சட்டத்திற்கு ஆதரவுகோரி அனைத்து கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்ற ஆதரவு கோரி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளித்திருந்தன. இதன் தொடர்ச்சியாக, வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இரு அவைகளின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டத்தை அதன் உண்மையான நோக்கத்தில் நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். 2029ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுடன் நடத்துவது அவசியமானது. பெண்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பை நிறைவேற்ற உங்களது ஆதரவு தேவை’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 543 என்பதில் இருந்து 816 ஆக உயரும். அதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதனை அமல்படுத்தும் வகையில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது கடிதத்தில், ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது நபருக்கோ அப்பாற்பட்டது. பெண்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான நமது பொறுப்பை நிரூபிக்க இதுவே சரியான தருணம். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அனைத்து கட்சிகளின் நீண்டகால விருப்பத்தை நனவாக்க இதுவே உகந்த காலம்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூடிய ஒன்றிய அமைச்சரவை, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் டெல்லி, புதுச்சேரி, ஜம்மு – காஷ்மீர் போன்ற சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கும் இடஒதுக்கீட்டை விரிவாக்கம் செய்யும் மசோதா ஆகிய மூன்றிற்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்றும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. குறிப்பாக, மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, தெலங்கானா போன்ற தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறையினால் தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என அச்சம் தெரிவித்தன. இந்நிலையில், வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மக்களவை இடங்களை 543 என்பதிலிருந்து 816 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். தற்போதுள்ள 543 இடங்களிலேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் லாபத்திற்காக இந்த கூட்டத்தொடர் கூட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக விவாதிக்க ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் வரும் 15ம் தேதி க்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : PM Modi ,special ,session ,New Delhi ,Modi ,EU ,
× RELATED டெல்லி கட்டுப்பாட்டில் அதிமுக: தோல்வி...