×

கால்வான் பள்ளத்தாக்கு மோதல் பின்னணி; ஒன்றிய அரசின் உத்தரவால் ‘சீனா’ பெயர் நீக்கம்: சல்மான் கான் நடித்த படத்தில் திருப்பம்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள போர் தொடர்பான திரைப்படத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதலை மையமாக வைத்து, பிரபல இயக்குனர் அப்புர்வா லக்கியா இயக்கத்தில் ‘பேட்டில் ஆப் கால்வான்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்திருந்தன. தற்போது நிலவும் சர்வதேச சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருதி, படத்தில் சில மாற்றங்களைச் செய்ய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதன் விளைவாக, படத்தில் ‘சீனா’ என்ற நாட்டின் பெயர் இடம்பெற்றிருந்த அனைத்து இடங்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், உண்மையான சம்பவத்தை அப்படியே பிரதிபலிக்காமல், ஒரு கற்பனை கலந்த கதையாக மாற்ற இயக்குனர் லக்கியா முடிவு செய்தார்.

இதற்காக படத்தின் 40 சதவீத காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, படத்தில் கதாநாயகனாக சல்மான் கான், கதாநாயகியாக நடிக்கும் சித்ராங்கதா சிங் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மற்றும் வீரர்களின் பின்னணிக் கதைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. படத்தின் தலைப்பும் ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து புதிய தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது இப்படம் மே 15ம் தேதி வெளியாகலாம் அல்லது ஜூனில் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : Galwan Valley ,China ,EU government ,Salman Khan ,Mumbai ,Union Ministry of Defence ,Bollywood ,
× RELATED வரும் 16ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற...