ஊட்டி, ஏப். 10: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தேயிலை பூங்காவில் 25 வகைகளை ெகாண்ட 3 லட்சத்து 80 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கோடை சீசன் போது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்,அனைத்து பூங்காக்களிலும் பல வகையான, மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அந்த செடிகளில் மலர்கள் பூக்க துவங்கியுள்ளது.
அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவிலும் கோடை சீசனை முன்னிட்டு பூங்காவை தயார் செய்யும் பணியில் தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்காவில் தற்போது 25 வகையான 3 லட்சத்து 80 ஆயிரம் மலர் நாற்றுக்கள் பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகளில் ஓரிரு நாட்களில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
