கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக, பாஜ வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 18 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 450 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், திமுக மற்றும் பாஜ நேரடியாக போட்டியிடும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் மட்டும் 49 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்பு மனுக்கள் திரும்ப பெற நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, வடக்கு தொகுதிக்கு 28 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், திமுக, பாஜ, தவெக, நாதக உள்ளிட்ட தேசிய, மாநில கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும் என்ற நிலையில், கோவை வடக்கு தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்த தொகுதியில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
