×

சூலூரில் 55 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட 2 பேருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை; ரூ.4.5 லட்சம் அபராதம் விதிப்பு

சூலூர்,ஏப்.8: சூலூரில், 55 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூலூரில் கடந்த 2023ம் ஆண்டு அப்போதைய கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் சூலூர் குளத்தூர் பிரிவு அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த்தில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கசாமி மகன் கருப்புசாமி (45), பெருமாள் மகன் நாகராஜ் (45) எனவும் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மேலும் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் ஆந்திராவில் இருந்து 55 கிலோ கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்காக கோவைக்கு 6 கிலோ எடுத்து வந்ததாகவும் மீதமுள்ள 49 கிலோவை மதுரையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கஞ்சாவை பறிமுதல் செய்து 55 கிலோ வைத்திருந்ததாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார். அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரான இந்த வழக்கில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறை தண்டனையும், நாகராஜுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் கருப்புசாமிக்கு மூன்று லட்சம் அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகளை காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sulur ,Karumathampatti ,DSP ,Thayalnayaki… ,
× RELATED ஆட்டோவில் 500 கிலோ குட்கா கடத்தியவர் கைது