×

உரிய ஆவணம் இல்லாத ரூ.30 லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்

பெரம்பூர், ஏப்.9: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது ரூ.24 லட்சம் சிக்கியது. விசாரணையில் மாதவரம் அருள் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(53), ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பிரதீப்(29) ஆகியோர் ஆவின் பால் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருவதும், பால் விற்பனை செய்த மொத்த பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பிடிபட்ட ரூ.24 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் பையில் சோதனை செய்தபோது ரூ.4 லட்சம் மதிப்பிலான 30 கிராம் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணியிடம் விசாரித்தபோது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த தீராஜ்(25) என்பதும், சித்தூரில் நகை கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், சென்னை சவுகார்பேட்டையில் தனக்கு தெரிந்த நபரிடம் நகைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பெரம்பூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.73 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் ஆலோசனையின் பேரில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Perampur ,Shaktivel Murugan ,Viasarpadi Malpatti Ponnapan Street ,Perampur Assembly Constituency ,
× RELATED ஏரியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற உணவு டெலிவரி ஊழியர் மாயம்