- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
- சென்னை
- சென்னை செயலகம்
- தவேகா
- விஜய்
- வில்லிவாக்கம்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்ததோ, அதுகுறித்த புகாரோ எதுவும் எங்களுக்கு வரவில்லை. அதே நேரத்தில் விஜய், விதிகளை மீறி கொளத்துார் தொகுதியில் பிரச்சாரம் செய்தததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து சென்னை தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து விளக்கம் வந்துள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிப்பதற்காக தமிழக அரசு ரூ.1,302 கோடி ஒதுக்கியுள்ளது. இம்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட வரும்போது, வெயிலில் இருந்து அவர்களை காப்பதற்காக, கியூ வரிசையில் இருக்கைகள் மற்றும் சாமியானா அமைக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் ஓட்டு சாவடிக்குள் செல்ல வசதியாக ரேம்ப் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கூடுதல் நிதி ஒதுக்க, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.
தமிழகத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்கு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு வளையத்துக்கள் (சிசிடிவி) கொண்டு வரப்படும். இங்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் பணியமர்த்தப்படுவர். துணை ராணுவ வீரர்களை பொறுத்தவரை ஏற்கனவே வந்துள்ள 50 கம்பெனிகள் தவிர கூடுதலாக 255 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகம் வருகின்றனர். ஓட்டுப் பதிவு நாளில் ஓட்டு மிஷின்கள் சில இடங்களில் இயங்காமல் போவதாக கேட்கிறீர்கள். அதற்காகத்தான் முன்கூட்டியே வேட்பாளர்கள் முன்னிலையில் ஓட்டு மிஷன்களை ஆய்வு செய்கிறோம். இம்முறை தேர்தல் பயன்பாட்டுக்காக ஓட்டு மிஷன்கள் 120 சதவீதமும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை கண்டறியும் மிஷன்கள் 140 சதவீதமும் தயாராக உள்ளது.
85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் ஓட்டுப் பதிவுக்கு இதுவரை 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. மைசூரில் இருந்து போதுமான அளவு மை பாட்டில்கள் வந்துள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அடுத்த கட்ட பயிற்சிகள் வரும் 14ம் தேதிக்கு பிறகு தொடங்கும். யாருக்கு உங்கள் ஓட்டு என்று அரசியல் கட்சிகள் பெயரை குறிப்பிட்டு கருத்து சொல்ல பேஸ்புக் போன்ற சமூக வளைதலங்களில் சிலர் பயன்படுத்துவது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது. இசிஐ பெயரில் போலியாக சில தகவல் பரிமாற்றங்கள் உள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் உடனுக்குடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.462 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களில் ரூ.280 கோடி மதிப்புள்ளவை உரியவர்களிடம் (95 சதவீதம்) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள ரூ. 182 கோடி அவர்களது விசாரணையில் உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43 ஆயிரத்து 220 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. விஜில் மூலம் பெறப்பட்ட 2 ஆயிரத்து 600 புகார் மனுக்களில் 2 ஆயிரத்து 364க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் சிவஞானம், இணை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
