சென்னை: ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட் கட்டணம் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக, விமான எரிபொருள்கள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் விமான கட்டணங்களை, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், இன்று முதல் உயர்த்தியுள்ளது. சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், உள்நாட்டு விமான கட்டணங்களை, 25 சதவீதத்திற்கு மேல் உயர்த்த கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. எனவே உள்நாட்டு விமான பயணங்களுக்கு, கட்டண உயர்வு ரூ.299 முதல்,ரூ.899 வரை அதிகரித்துள்ளது.
அதன்படி, முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.299, 501 கி.மீட்டரில் இருந்து 1000 கி.மீட்டர் வரை ரூ.399, 1001 முதல் 1,500 கி.மீட்டர் வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கி.மீட்டர் வரை ரூ.749, 2000 கி.மீட்டருக்கு மேல் ரூ.899 கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சர்வதேச விமானங்களுக்கு, சிவில் விமான போக்குவரத்து துறை கட்டண உயர்வுகளுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்காததால், சர்வதேச விமான கட்டணங்கள் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. சார்க் நாடுகளுக்கு (பங்களாதேஷ் தவிர) விமான கட்டணங்கள்(24 யுஎஸ் டாலர்) ரூ.1,992 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு (50 யுஎஸ் டாலர்) ரூ.4,150, சீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு (சிங்கப்பூர் தவிர) (100 யுஎஸ் டாலர்) ரூ.8,300 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா நாடுகளுக்கான கட்டண உயர்வுகள், நாளை மறுநாள் (10ம் தேதி) அதிகாலை முதல், அமலுக்கு வருகிறது.யூகே எனப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு (205 யுஎஸ் டாலர்) ரூ.17,015, வட அமெரிக்க நாடுகளுக்கு (280 யு எஸ் டாலர்) ரூ.23,240, ஆஸ்திரேலியா நாட்டிற்கு (280 யுஎஸ் டாலர்) ரூ.23,240 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வுகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்க, முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டண டிக்கெட்களில் பயணிக்கலாம். ஆனால் பயண தேதி, அல்லது பயணம் செய்யும் இடங்களை மாற்றினால், புதிய கட்டணம் வசூலிக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பின்பு, ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குள், இரண்டாவது முறையாக, விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
