×

கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

டெல்லி: கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த 2021ம் ஆண்டில் கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி வெற்றி பெற்று பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதேபோல் அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணியும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில், இந்த மாநிலங்களுக்கான அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் உள்ள 140 தொகுதிகள், அசாமில் உள்ள 126 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள் என மொத்தம் 296 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப். 9ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தற்போது நிறைவடைந்தது. அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 48 மணி நேர அமைதி காலம் அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் (71), கே.கே.ஷைலஜா, எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் மற்றும் பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட 985 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாமில் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் மாநில தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்ட 789 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரசாரம் இன்றுடன் ஓயும் நிலையில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இன்று மாலை முதல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி உண்டு.

டிவி, ரேடியோ மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு தகவலையும் வெளியிடக்கூடாது. செய்தித்தாள்களில் நாளையும், நாளை மறுநாளும் விளம்பரம் செய்ய வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற 5,000க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

Tags : Kerala ,Puducherry ,Assam ,Delhi ,Marxist ,Communist ,L. D. The F ,Pinarayi Vijayan ,
× RELATED கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில்...