அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). அவரது மனைவி லதா (44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜஸ்டினுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருமனை பகுதியை சேர்ந்த அஜி (52) என்பவர் ரப்பர் பால் வெட்டும் வேலைக்காக ஈஞ்சகோட்டில் ஜஸ்டின் வீட்டுக்கு அருகே உள்ள இடத்துக்கு வந்துள்ளார். அப்போது அஜி, லதா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது லதா கணவர் மதுகுடித்து வந்து தகராறு செய்வதை அஜியிடம் கூறியுள்ளார். நாளடைவில் அவர்களிடையே பழக்கம் தீவிரமடைந்து லதா கணவரை விட்டு பிரிய முடிவு செய்தார். இதையடுத்து அஜி அருமனை அருகே காரோடு பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து லதா கணவரை விட்டு பிரிந்து ஒரு மகனுடன் காரோட்டில் உள்ள வாடகை வீட்டுக்கு வந்து குடியேறினார். அஜி அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு சில காலம் கடந்து உள்ளது.
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜி வேறு பெண்ணை வாடகை வீட்டில் குடியமர்த்தி உள்ள தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்து உள்ளது. இதனால் குடும்பத்தினர் அஜிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அஜி காரோட்டில் லதா வீட்டில் நிரந்தரமாக தங்கியுள்ளார். அவர் வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஹெல்மட் அணிந்து கொள்வாராம். இந்த சூழ்நிலையில் லதாவின் மகன் தனது தாயின் செயல்பாடு பிடிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அன்றில் இருந்து லதா, அஜி மட்டும் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.நேற்று மாலை வீட்டில் லதா, அஜி இருந்துள்ளனர். அப்போது அங்கு லதாவின் கணவர் ஜஸ்டின், விஜித் உள்பட 4 பேர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து உடைத்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று அங்கிருந்த அஜியை ஒரு அறைக்குள் இழுத்து சென்று சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த லதாவை சாவியால் குத்தினர். இதையடுத்து கொலைமிரட்டல் விடுத்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டனர்.
இதுகுறித்து அருமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்த அஜியை குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், லதாவை அருமனை அரசு மருத்துமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் அஜி மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் மீறிய உறவில் வசித்து வந்த 2 பேரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிய கணவர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அருமனை பதுங்கி இருந்த ஜஸ்டின் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
