×

சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் நாள் பிரசாரத்திலேயே அதிமுக, பாஜகவினர் கடும் ரகளை: சாலையில் சென்ற இருவரை பிடித்து சரமாரி தாக்குதல்; இறந்தவரின் பிரேதத்தை எடுக்க விடாமல் அட்டூழியம்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக மற்றும் பாஜகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அராஜகமாக நடந்துகொண்டனர். பாஜகவினர் ஒரு படி மேலே போய், சாலையில் நடந்து சென்ற இருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.பி.கந்தன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொட்டிவாக்கம் அம்பேத்கர் பிராதன சாலை கங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பூஜையுடன் கே.பி.கந்தன் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் சாலையை மறித்தபடி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நின்றிருந்தனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்களுக்கு வழிவிடும்படி கேட்டனர். உடனே அங்கிருந்த பாஜகவினர், யாரை பார்த்து வழியை விட சொல்கிறாய்? எனக் கேட்டு பைக்கில் வந்த இருவரையும் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்தவர்கள் தடுத்தும் பாஜகவினர் காதில் வாங்காமல் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அதிமுக, பாஜகவினர் அதிக அளவில் இருந்ததால், காயம் அடைந்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சம்பவம் நடந்த பகுதியில் மூர்த்தி (40) என்பவர் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் மாரடைப்பால் இறந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இறந்தவர் உடலை வீட்டிலேயே வைத்திருக்குமாறும், பிரசாரம் முடிந்த பிறகே உடலை வீட்டின் வெளியே எடுத்து வரவேண்டும் என்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். இதனால் இறந்தவரின் வீட்டை கே.பி.கந்தன் கடந்த சென்ற பின்பே மாலை 6 மணிக்கு, அதாவது சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து, இறுதி சடங்கினை செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் சாலையின் இருபுறமும் வீடுகள் அமைந்துள்ள அந்த குறுகிய சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பட்டாசை வெடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் வீட்டின் அருகிலேயும் பட்டாசு வெடித்து மகிழந்தனர். இவர்களின் பிரசாரத்தால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சென்றனர். பிரசாரத்திற்கே இந்த நிலை என்றால் இவர்களெல்லாம் வெற்றி பெற்றால் இந்த தொகுதி என்ன கதிக்கு ஆகும்? என அப்பகுதி மக்கள் புலம்பி தீர்த்தனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags : AIADMK ,BJP ,Sholinganallur ,Chennai ,
× RELATED 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ வழக்கில் கைது