×

உணவு டெலிவரி ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு: இரு வாலிபர்கள் கைது

 

ஆலந்தூர், ஏப்.6: மீனம்பாக்கத்தில் உணவு டெலிவரி ஊழியரை சரமாரி கத்தியால் தாக்கி பணம், ஐபோன் பறித்த 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழியைச் சேர்ந்தவர் ரியாஸ் முகமது (22). இவர், சென்னையில் தங்கி விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி மாலை வாடிக்கையாளர் ஒருவர் செல்போன் மூலம் பிட்சா கேட்டு இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு, மீனம்பாக்கம் ரயில்வே கேட் அருகில் இருந்த 5 பேரிடம் விசாரித்துள்ளார். அதில் ஒருவர் நான்தான் ஆர்டர் செய்தேன் என கூறி திடீரென ரியாஷ் முகமதுவை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி ரியாஸ் முகமதுவின் ஐபோனிலிருந்து ஜிபே மூலம் ரூ.2,650ஐ தங்களது செல்போனுக்கு அனுப்பி விட்டு ரியாஸ் முகமதுவை பீர் பாட்டிலால் தாக்கி அவர் வைத்திருந்த ஐபோன் மற்றும் வெள்ளிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பலத்த காயமடைந்த ரியாஸ் முகமது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து மீனம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), திருப்போரூர் பையனூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (20) என்பது தெரிய வந்தது. இந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிறாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Alandur ,Riaz Mohammed ,Chennai ,
× RELATED எச்.ராஜா பேச்சால் அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பம்