- ராம்பூர்
- ரயில் நிலையம்
- புறநகர்ப் ரயில்
- தெற்கு ரயில்வே தகவல்
- சென்னை
- லம்பூர்
- தெற்கு ரயில்வே
- சென்னை ராம்பூர் ரயில் நிலையம்
சென்னை, ஏப்.3: எழும்பூரில் ரயில் நிலையத்தில் நடைமேடை எண்.10 மற்றும் 11ல் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டதால் புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும், என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 10 மற்றும் 11-ல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பணிகளும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடிக்கப்பட்டதால், இந்த தடை முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு, புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி முதல் அமலில் இருந்த தற்காலிக புறநகர் ரயில் கால அட்டவணை ரத்து செய்யப்படுகிறது. கடந்த 20ம் தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வருகிறது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடத்தில் அனைத்து மின்சார ரயில் சேவைகளும், அதன் நிறுத்தங்கள் மற்றும் இயக்க முறைகளும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன. இது தினசரி பயணிகளுக்கு மீண்டும் தடையற்ற மற்றும் திறமையான ரயில் சேவையை உறுதி செய்கிறது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் அதே வேளையில், ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சென்னை கோட்டத்தின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியின் பலனாக இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த தடை காலத்தின் போது பயணிகள் காட்டிய பொறுமைக்கும், புரிதலுக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பயணிகள் வழக்கமான கால அட்டவணையைப் பின்பற்றிப் பயணிக்கலாம். சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்திற்கான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கான வழக்கமான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது, என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
