×

தம்பட்டத்துக்கு பல ஆயிரம் கோடி செலவிடும் மோடி அரசு; மாநிலத்துக்கு நிதியில்லை விளம்பரத்துக்கு அளவில்லை: முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கியதை விட கூடுதல் செலவு புள்ளி விவரங்களில் அம்பலமான அதிர்ச்சி தகவல்

 

மாநில வரிப்பகிர்வில் சம பங்கீடு இல்லை… கல்வி நிதி இல்லை…பேரிடர் நிவாரணத்துக்கு நிதி குறைவு என தமிழ்நாட்டை பாஜ தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆதாரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இருப்பினும், ஒன்றிய அரசு நிதியை விடுவிப்பதாக இல்லை. பிஎம் ஸ்ரீ போன்ற திட்டங்களை செயல்படுத்த வில்லை, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மேலும், போதுமான நிதி இல்லை என்று கைவிரித்து வருகிறது ஒன்றிய பாஜ அரசு. இப்படி மாநில நிதியை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசு, விளம்பரத்துக்கு செலவிடுவதில் எந்த வித சிக்கன நடவடிக்கையும் காட்டுவதில்லை என, புள்ளி விவரங்கள் மெய்ப்பிக்கின்றன. அரசே இந்த தகவலை வெளியிடுவதில்லை. அவ்வப்போது ஆர்டிஐ மூலம் கேட்கப்படும் கேள்விகள் மூலம் இவை அம்பலம் ஆகியுள்ளன.
ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, விளம்பரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பான விவரங்கள் கோரி, கடந்த 2017ம் ஆண்டு ஆர்டிஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அளித்த பதிலில், 2014 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை ரூ.3,755 கோடி (ரூ.37,54,06,23,616) செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், வானொலி, டிஜிட்டல் சினிமா, தூர்தர்ஷன், இணையதளங்கள், எஸ்எம்எஸ் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடக விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.1,656 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. அச்சு ஊடகங்களைப் பொறுத்தவரை, ரூ.1,698 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

இதுதவிர, விளம்பரப் பலகைகள், போஸ்டர்கள், சிறு புத்தகங்கள் மூலம் விளம்பரங்களுக்காக, ஒன்றிய அரசு ரூ.399 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. மேலும், விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை சில முக்கிய அமைச்சகங்கள் மற்றும் அரசின் முதன்மைத் திட்டங்களுக்கு ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட அதிகம். உதாரணமாக, மேற்கண்ட தரவல் தரப்பட்ட 2017ம் ஆண்டு வரையிலான முந்தைய 3 ஆண்டுகளில் மாசு குறைப்பு நடவடிக்கைகளுக்காக அரசு ஒதுக்கியது ரூ.56.8 கோடி மட்டுமே. முன்னதாக, 2016ம் ஆண்டிலும் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் 2014 ஜூன் 1 முதல் 2016 ஆகஸ்ட் 31 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கான விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.1,100 கோடி செலவிடப்பட்டது தெரிய வந்தது. அதில் 2014 ஜூன் 1 முதல் 2015 மார்ச் 31 வரை ரூ.448 கோடியும், 2015 ஏப்ரல் 1 முதல் 2016 மார்ச் 31 வரை ரூ.542 கோடியும், 2016 ஏப்ரல் 1 முதல் 2016 ஆகஸ்ட் 31 வரை ரூ.120 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 2014 முதல் 2018 வரை மோடி அரசு விளம்பரத்துக்காக செலவிட்ட தொகை ரூ.4,343 என தெரிய வந்துள்ளது. 4 ஆண்டில் செலவிட்ட இந்த தொகை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டில் செலவிட்டதை விட 2 மடங்கு அதிகம். மற்றொரு புள்ளி விவரத்தின்படி, 2020-21 நிதியாண்டில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.2,320.14 கோடியை மோடி அரசு விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பதிலில், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு மோடி அரசு 2014ம் ஆண்டு முதல் 2022 வரை 8 ஆண்டில் ரூ.6,491.56 கோடி செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் மின்னணு ஊடகங்களுக்கு ரூ.3,260.79 கோடியும், அச்சு ஊடகங்களுக்கு ரூ.3,230.77 கோடியும் அடங்கும். மின்னணு ஊடகங்களை பொறுத்தவரை 2016-17 நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.609.15 கோடியும், அதற்கு அடுத்து 2015-16ல் ரூ.531.60 கோடி, 2018-19ல் ரூ.514.28 கோடி செலவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மற்றொரு புள்ளி விவரத்தின்படி, கடந்த 2024 -25 நிதியாண்டில் விளம்பரத்துக்கு ரூ.1,089 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கண்ட புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது ஆணடுக்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை செலவிடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. விளம்பரத்துக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்த வெளிப்படையான புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் கூட, 2014ம் ஆண்டு முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் ரூ.6,491.19 கோடியும், 2022-24ல் மொத்தம் ரூ.1,800 கோடியும் என ஆர்டிஐ புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 2024-25 பட்ஜெட்டில் தகவல் மற்றும் விளம்பரத்துக்கு ரூ.1,089 கோடி, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ1,210.76 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டு வரை ரூ.11,000 கோடி விளம்பரத்துக்காக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை மறுத்து விட்டு, விளம்பரத்துக்கு அளவில்லாமல் செலவிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Modi government ,BJP ,Tamil Nadu ,Tamil Nadu government ,Union government ,
× RELATED பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில்...