×

அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு ரூ.405 கோடி சொத்து: மனைவியிடம் 710 கிராம் தங்கம்

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் இணைத்து சமர்ப்பித்தார். 61 வயதாகும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்று முழுநேர தொழிலதிபராக வலம் வருகிறார். இவரது மனைவி மீனாட்சி சித்த மருத்துவராகவும் தொழிலதிபராகவும் உள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த கணக்கின்படி இசக்கி சுப்பையா பெயரில் ரூ.5.98 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன. அவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.4.33 கோடி அளவுக்கு அசையும் சொத்துகள் இருக்கின்றன. ஹிந்து கூட்டு குடும்ப கணக்கில் ரூ.31 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக காட்டியுள்ளார். மனைவியிடம் 88.75 பவுன் (710 கிராம்) தங்க நகைகள் இருப்பதாகவும் தனது பெயரில் நகைகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.  சென்னை, தென்காசி குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு நிலங்களும் வணிக கட்டிடங்களும் உள்ளன.

இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.388 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மனைவி மீனாட்சி பெயரில் ரூ.12 கோடி அளவிலும் கூட்டு குடும்ப கணக்கில் ரூ.6 கோடி அளவிலும் அசையா சொத்துகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவருடைய குடும்ப சொத்து மதிப்பு ரூ.405.91 கோடியை தாண்டுவதாக அந்த ஆவணம் வாயிலாக தெரிய வந்துள்ளது. வங்கிகள் மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய வகையில் இசக்கி சுப்பையாவுக்கு ரூ.2.66 கோடி கடன் உள்ளது.

மீனாட்சிக்கு ரூ.3.10 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் போலீசார் இவர் மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எந்த வழக்கிலும் தான் இதுவரை தண்டனை பெறவில்லை என்று இசக்கி சுப்பையா பதிவு செய்துள்ளார்.

* மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொத்து மதிப்பு ரூ.4.87 கோடி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்கு ரூ.44 லட்சத்து 95 ஆயிரத்து 59 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.12 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மனைவி இந்திராகாந்தி பெயரில் ரூ.1 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரத்து 990 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன.

ஆக இருவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.4 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 49 அளவுக்கு சொத்துகள் உள்ளன. கடம்பூர் ராஜூ பெயரில் வங்கி கடன் எதுவும் இல்லை. ஆனால் அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 81 லட்சத்து 28 ஆயிரத்து 207 வங்கி கடன் நிலுவையில் உள்ளதாக உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக இவர் மீது சென்னை அபிராமபுரம் போலீசார் கடந்த 2017ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

வேறு குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்றும், எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை பெறவில்லை என்றும் கடம்பூர் ராஜூ தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடம்பூர் ராஜூ பி.யு.சி மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயம் ஆகிய படிப்புகளை முடித்துள்ளார். இவரது மனைவி இந்திராகாந்தி எல்.ஐ.சி முகவராக செயல்பட்டு வருவதோடு பெட்ரோல் பங்க் உரிமையாளராக தொழில் செய்து வருகிறார்.

Tags : Amba ,AIADMK ,Isakki Subbaiah ,Nellai ,Former minister ,Ambasamudram ,
× RELATED போதிய கூட்டமில்லை என மாவட்ட செயலாளர்...