×

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில் கலெக்டர் உத்தரவை மீறி சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில், அவரது உத்தரவை மீறி வைகுண்டம் ஊருக்குள் பேருந்து வராமல் நள்ளிரவில் புறக்கணித்து செல்ல முயன்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற இளம் பகவத், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’’ திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று, நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்தி ஊருக்குள் வராத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தார். அவரது கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக அனைத்து பேருந்துகளும் முறையாக ஊருக்குள் வந்து சென்றன.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டர் பொறுப்பேற்ற நிலையில் நேற்று நள்ளிரவில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என ஒவ்வொரு நிறுத்தத்திலும் நடத்துனர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், உடனடியாக ஊர் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து திரண்ட பொதுமக்கள், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் புதுக்குடி வழியாகச் செல்ல முயன்ற அரசு பேருந்தை வழிமறித்து சிறைபிடித்தனர். பயணிகளின் நலனைப் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் தன்னிச்சையாகச் செயல்பட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பேருந்து மீண்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் திருப்பி விட்டனர். முன்னாள் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவை மீறி மீண்டும் பேருந்துகள் ஊருக்குள் வராமல் இயக்கப்பட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நள்ளிரவில் பயணிகள் நலனை பொருட்படுத்தாமல் செல்ல முயன்ற அரசு பேருந்து சிறைபிடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய மாவட்ட கலெக்டர், ஸ்ரீவைகுண்டத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ஸ்ரீவைகுண்டம் மக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது.

Tags : Srivaikundam ,Thoothukudi District ,Vaikundam ,Nair ,Thoothukudi ,District ,
× RELATED அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி...