×

பாஜவில் உழைப்பவருக்கு மட்டுமே அங்கீகாரம்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி

சென்னை: தமிழக பாஜ சார்பில் தமிழக அரசின் நிதி நெருக்கடி குறித்த வெள்ளை அறிக்கையை சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் ஒன்றிய அமைச்சரும், பாஜ மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தமிழகம் என்பது தொழில்துறை, கடின உழைப்பாளி விவசாயிகள், வலுவான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மீனவர்கள் மற்றும் திறமையான இளைஞர்களைக் கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாநிலம். அவர்கள் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள், வளங்களை உருவாக்குகிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் கஜானா மட்டும் காலியாக இருக்கிறது. தமிழக அரசின் கடன் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது விரைவில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, தமிழக மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி கடன் உள்ளது.  இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி வட்டியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டியுள்ளது.

வட்டியும், சம்பளமும் கொடுத்த பிறகு தமிழகத்தின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் என எதுவுமே மிஞ்சவில்லை. மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாக மட்டும் தமிழகத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடிக்கும் மேல் வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு 7 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, இப்போது ஜிஎஸ்டியால் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இருந்தும் அந்தப் பணம் எங்கே போனது? எதற்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்தினீர்கள்? பொதுமக்களுக்கு என்ன பயன் கிடைத்தது?

குறிப்பாக 28 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப் மற்றும் பணிக்கொடை கடந்த 25 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய் அல்லது நரேந்திர மோடி என யாருடைய குடும்பமும் அரசியலில் இல்லை. என் தந்தை அரசியலில் இருந்திருக்கலாம், ஆனால் நான் 24 ஆண்டுகள் ஒரு சாதாரணத் தொண்டனாக, சுவரொட்டி ஒட்டுவது முதல் அனைத்துப் பணிகளையும் செய்த பிறகே இந்த நிலைக்கு வந்துள்ளேன். பாஜவில் உழைப்பவருக்கு மட்டுமே அங்கீகாரம், வாரிசுகளுக்கு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,Union Minister ,Piyush Goyal ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu BJP ,Kamalalayam ,Tamil ,Nadu ,
× RELATED அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி...