×

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி வரத்து நீடிக்கிறது 7வது இந்திய கப்பல் கடந்தது: 7 ஆண்டில் முதல்முறையாக ஈரானிடமிருந்தும் கொள்முதல்

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு எரிவாயு, எண்ணெய் விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதித்து வருகிறது. இந்நிலையில், கிரீன் சான்வி என்ற இந்திய கப்பல் 46,650 டன் எல்ஜிபி சரக்குடன், 25 மாலுமிகளுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளதாக மேற்கு ஆசிய நிலவரங்கள் குறித்த ஒன்றிய அரசு அறிக்கையில் நேற்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் மூண்ட பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் 7வது இந்திய கப்பலாகும். இதுதவிர, ஈரானில் இருந்து எல்பிஜி சரக்கு கப்பல் ஒன்று மங்களூர் வந்தடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் எக்ஸ் பதிவில், ‘‘சுமார் 44,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த ஈரானின் ‘சீ பேர்ட்’ கப்பல் ஏப்ரல் 2ம் தேதி மங்களூருவில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டு வருகிறது’’ என கூறி உள்ளது. ஈரான் கப்பல் மூலமாக எல்பிஜியை இறக்குமதி செய்வது கடந்த 7 ஆண்டில் இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* போதிய எரிபொருள் உள்ளது பதற்றம் அடைய வேண்டாம்
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட தடங்கல்கள் இருந்தபோதிலும், எரிபொருள் விநியோகம் போதுமானதாக இருப்பதாகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை மக்கள் பீதியுடன் வாங்குவதை தவிர்க்குமாறும் ஒன்றிய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மற்றம் சமையல் எரிவாயுவின் தடையற்ற இருப்பை உறுதி செய்ய அரசு முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியதுடன், மக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி பெட்ரோல், காஸ் போன்றவற்றை சேமிக்க அறிவுறுத்தி உள்ளது. பதுக்கல், கள்ளச்சந்தைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 3,700 சோதனை நடத்தப்பட்டு 27 விற்பனையங்கங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்றும் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Tags : Strait of Hormuz ,Iran ,New Delhi ,US ,Israel ,India ,Green… ,
× RELATED தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5...