திருப்பூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 2 தொகுதிகள் பாஜவுக்கும், ஒரு தொகுதி அமமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்லடம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் 63.வேலம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்தார். அவரை வரவேற்கும் விதமாக தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். மேளம், தாளம் முழங்க வரவேற்பு நடைபெற்றது.
மேளம் இசை கலைஞர்களுக்கும் அதிமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் டி சர்ட்டுகளை கொடுத்து அணியும்படி கூறி அணிய வைத்துள்ளனர். அப்போது மேளம் இசைக்கும் நபர் ஒருவர் கழுத்தில் விசிலை தொங்கவிட்டிருந்தார். அவர் அவ்வப்போது மேளம் இசைத்தும், அதற்கேற்றபடி விசில் ஊதியபடியும் இருந்தார். இதனை கண்டித்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் என்பவர் எப்படி விசில் ஊதலாம்? இது என்ன விஜய் கட்சி நிகழ்ச்சியா என்று கூறி, மேளம் அடித்த நபரின் கழுத்தில் கிடந்த விசிலை பிடுங்கி வீசி ஏறிந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
