×

சொன்னாரு..! செஞ்சாரு..!! கருவறை புரட்சி

சொன்னாரு: திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பின் கீழ் பெண்களும் அர்ச்சகர்கள் – ஓதுவார்களான நியமிக்கப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: தமிழகத்தின் பல நூற்றாண்டுகளாகக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமையும், தேவாரத் திருமுறைகளைப் பாடும் ஓதுவார் பணியும் ஆண்களுக்கு மட்டுமேயான ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. இந்த மரபுசார்ந்த தடைகளை உடைத்து, ‘இறைவனுக்கு முன்பாக அனைவரும் சமம்’ என்ற சமத்துவக் கொள்கையை நிலைநாட்டியுள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்பது பெரியாரின் வாழ்நாள் போராட்டங்களில் ஒன்று. இதற்கான சட்டத்தைக் 1970-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். இருப்பினும், நீண்டகாலச் சட்டப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதன் பின்னர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் இது அமல்படுத்தப்பட்டது.

2021 ஆகஸ்ட் 14ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுஹாஞ்சனா கோபிநாத் என்பவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அவர் சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டார். இவர் முறைப்படி பண்ணிசை மற்றும் திருமுறைகளைப் பயின்றவர். ‘ஓதுவார்’ என்பது வெறும் பாடகர் பதவி மட்டுமல்ல, அது இறைப்பணியில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிலை. ஒரு பெண் அரசுப் பணியில் ஓதுவாராக நியமிக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும்.

தமிழக அரசு தனது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் சீரமைத்தது. ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பள்ளி மூலமாக முதன்முறையாக பெண்களும் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பயிற்சியை முடித்த மூன்று பெண்களுக்கு அர்ச்சகர் பணிக்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரி ரம்யா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கணித பட்டதாரி கிருஷ்ணவேணி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி பட்டதாரி ரஞ்சிதா ஆகியோர் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, கருவறைக்குள் சென்று இறைவனுக்குப் பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களது நியமனம் திராவிட மாடல் ஆட்சியின் பாலின சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கருவறைக்குள் பெண்களின் நுழைவு என்பது வெறும் மத சடங்கு அல்ல;

அது பெண்களின் தகுதியையும், ஆளுமையையும் சமூகத்தின் உயர்ந்த தளத்தில் நிலைநிறுத்துவதாகும். அர்ச்சனை தமிழில் செய்யப்படுவதும், பெண் ஓதுவார்கள் தமிழ் இசை பாடுவதும் பெரும் பலம் சேர்த்துள்ளது. சாதி பாகுபாடு ஒழிப்புடன் பாலின பாகுபாடும் ஒழிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. பெண்கள் எங்கும் செல்லலாம், எதையும் சாதிக்கலாம் என்பதற்குத் தமிழகக் கோயில் கருவறைகளே இன்று சாட்சியாக உள்ளன.

Tags : Sonnaru ,Senchararu ,DMK ,MK Stalin ,Tamil Nadu ,Archana ceremony ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...