ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக்-இன்-இந்தியா திட்டங்களின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் மலை பகுதிகளில் வான் வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2 அதிநவீன மவுண்டைன் ரேடார்களை (Mountain Radars) வாங்க திட்டமிட்டு உள்ளது.
இந்திய விமானப்படைக்காக இரண்டு மவுண்டைன் ரேடார்கள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் இதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை சுமார் ரூ.1,950 கோடி செலவில் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகமானது (MoD), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2 அதிநவீன ரேடார்களை கொள்முதல் செய்வது தொடர்பான இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் BEL நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தலைநகர் டெல்லியில் கையெழுத்தானது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ள மவுண்டைன் ரேடார், DRDO-வின் மின்னணு மற்றும் ரேடார் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது; இது BEL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம்கொள்முதல் செய்ய உள்ள இந்த அதிநவீன ரேடார்களை நிறுவி செயல்பாட்டிற்கு கொண்டுவருவது, நாட்டின் வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதுடன் தேசியப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும். மேலும், இந்த கொள்முதல் நடவடிக்கையானது வெளிநாட்டு உபகரணங்களைச் சார்ந்திருக்கும் நிலையையும் குறைக்கும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் இருக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை இலக்காகக் கொண்டு, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் மற்றும் நாகாலாந்தின் ஃபுட்செரோ ஆகிய இடங்களில் இந்த ரேடார்கள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த அதிநவீன ரேடார்கள் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எளிதாக கண்காணிக்கும். தாழ்வாகப் பறக்கும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களும் கூட இந்த கண்காணிப்பு வளையத்தில் அடங்கும்.
மேலும் இந்த ரேடார்கள் அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் திறன் கொண்டிருப்பதால், அதிக உயரமுள்ள மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றவையாகும். மொத்தத்தில் இந்த ரேடார்கள் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்தவும் கணிசமாக உதவும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த ஒப்பந்தமானது உள்நாட்டுப் பாதுகாப்பு தயாரிப்புகளுக்கு அரசு அளித்து வரும் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதனிடையே இந்திய விமானப்படைRPSA திட்டத்தின் கீழ் ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானங்களை படை பிரிவில் சேர்க்கத் தயாராகி வருகிறது. இது உள்நாட்டுத் தொழில்துறைக்கு சுமார் ரூ.390 பில்லியன் மதிப்பிலான வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
