புதுடெல்லி: வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகளின் சொத்துகளை ஒன்றிய அரசு கையகப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சுமார் 16,000 அமைப்புகள் பதிவு பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் ஆண்டுக்கு தோராயமாக 22,000 கோடி ரூபாய் நிதி இந்தியாவிற்குள் வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாநிலங்களான தமிழ்நாட்டில் 6,742 அமைப்புகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,437 அமைப்புகளும், கேரளாவில் 3,090 அமைப்புகளும் அதிக அளவில் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதா – 2026, தற்போது அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, ஒரு அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியானாலோ, அந்த அமைப்பின் வெளிநாட்டு நிதி மூலம் உருவாக்கப்பட்ட நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட சொத்துகளை இந்த புதிய அமைப்பு பராமரிக்கவோ அல்லது விற்கவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘இந்த மசோதா கிறிஸ்தவ அமைப்புகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. சிறுபான்மையினரால் நடத்தப்படும் நலத்திட்ட அமைப்புகளை அச்சுறுத்தவே ஒன்றிய அரசு இதனை கருவியாகப் பயன்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘சிறுபான்மை சமூகத்தின் சொத்துகளை தன்னிச்சையாகப் பறிமுதல் செய்யவே இந்த சட்டம் வழிவகை செய்கிறது. வெறும் நடைமுறை தாமதங்களைக் காரணம் காட்டி சொத்துகளைப் பறிப்பது கவலைக்குரியது’ என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள பாஜக கேரளா பிரிவு, இது கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கவும், தேச விரோத செயல்களுக்கு நிதி செல்வதைத் தடுக்கவுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், சிஏஏ மற்றும் வக்ஃப் சட்ட திருத்தத்தின் போது கிளப்பப்பட்டதைப் போன்ற தேவையற்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன என்றும் கூறியுள்ளது.
இதற்கிகிடையே ஒன்றிய புதிய சட்ட மசோதாவுக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை உள்ளிட்ட மத அமைப்புகளும், இந்த சட்டத்தால் தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அரசு வசமாகும் அபாயம் இருப்பதாக தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. புதிய சட்டத்தில் விதிமீறல்களுக்கான சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், சொத்துகளைக் கையகப்படுத்தும் விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விதிமீறல் புகார்களின் அடிப்படையில், நாடு முழுவதும் சுமார் 21,700 அமைப்புகளின் வெளிநாட்டு நிதி உரிமங்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
