×

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

பரமத்திவேலூர், ஏப்.1: பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரிழுத்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. 30ம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் கூட்டுதல் மற்றும் திருத்தேர் நிலை பெயர்த்தலும் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்றிரவு மீண்டும் நிலையை அடைந்தது. இன்று 1ம் தேதி) இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், கிடா வெட்டுதலும், நாளை(2ம் தேதி) அதிகாலை கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லுதலும், 3ம் தேதி மாலை மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பரமத்திவேலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Maha Mariamman Temple Chariot Festival ,Paramathivellur ,Namakkal district ,Kambam ,
× RELATED குமாரபாளையம் அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் அதிரடி கைது