குமாரபாளையம், மார்ச் 29: பழுதான இயந்திரங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு, துரிதமான வாக்கு பதிவு செய்வது குறித்து வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 907 பேர் இந்த முகாமில் பங்கேற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன், உதவி அலுவலர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் வடிவேல் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில், தேர்தல் நாளில் வாக்கு பதிவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு பதிவின் போது, இயந்திரத்தில் ஏதும் கோளாறு ஏற்பட்டால் தாமதமின்றி மண்டல அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக மாற்று இயந்திரம் வைத்து வாக்குபதிவினை தாமதப்படுத்தாமல் தொடரும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாக்கு பதிவை தாமதப்படுத்தாமல், குழப்பம் இல்லாமல் துரிதமாக நடத்த வேண்டுமென பயிற்சியளிக்கப்பட்டது.
