×

ஈரூரில் பிறந்தார் எல்லாம் சிவகணங்களே!

பண்டைக் காலத்தில் சமணமதமும், புத்த மதமும் மக்களைச் சமமாக மதித்து நடத்தியது. சமணர்களும் பௌத்தர்களும் தங்கள் மதத்தின் பிரச்சாரத்திற்காகக் காவியங்களையும், சிற்பங்களையும், திருக் கோயில்களையும் படைத்தனர். ஆனால் நம் சைவ சமயத்திற்கு தோத்திர நூல்கள் பல இருந்தாலும் பிரச்சாரக் காப்பியம் இல்லாமல் இருந்தது. அதனால் அதனைச் சீர் செய்யத்தான் சேக்கிழார் பெருமான அவர்கள். ‘திருத் தொண்டர்’ வரலாற்றினை ஒர் சைவ சமயப் பிரச்சாரக் காப்பியமாகப் பாடியருளினார். தெய்வச் சேக்கிழார் சமய மறு மலர்ச்சி ஏற்படுத்திட சமுதாய மறு மலர்ச்சி தேவை என நம்பினார்.

தீண்டாமை என்ற கொடுமை இந்து மதத்தின் சாபக்கேடு என்பதை சேக்கிழார் பெருமான் நன்கு உணர்ந்திருந்தார். அக்கால கட்டத்தில் சாதிக் கொடுமைகளைப் பெருமையாக எண்ணி வாழ்ந்தனர். எனவே அதனை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அகழ்ந்து எடுத்து அடித்து ஒழிக்க முனைந்தார் சேக் கிழார் பெருமான்.

சேக்கிழார் எழுதிய ‘திருத் தொண்டர் புராணம்’ எனும் ‘பெரிய புராணம் சைவ திருமறைக்கு ஒரு புனிதநூல். ஒரு சமயப் பிரச்சார நூல் என்றும் சொல்லலாம். சிவபெருமானையே போற்றி திருத்தொன் புரிந்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களது சிவத் தொண்டு மெய் சிலிர்க்கச் செய்வது. பக்தி என்பதற்கும் அருட் கொண்டு என்பதற்கும் இலக்கணம் வகுப்பது போல் நாயன்மார்களின் அனுபவங்கள் அற்புதமாய் அமைந்திருக்கும். தனது பக்தர்கள் தன்மீது கொண்டிருக்கும் அன்பை சோதிக்கவும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டவும் சிவபெருமான் நாடகமாடிய திருவிளையாடல்களில் புசம் போட்ட பொன்னாக மின்னியவர்கள் நாயன்மார்கள். அவர்களிடம் சாதிமத வேறுபாடுகள் இல்லை. பக்தி, ஒழுக்கம், விருந்தோம்பல், சமூக நல்லுணர்வு, பண்பாடு, தொண்டு, இவையாவற்றுக்கும் மேலான ‘நட்பு’ இவற்றையே இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்ற உயிரினும் மேலான கொள்கைகளையே நாயன்மார்கள் உணர்வுப் பூர்வமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வரலாறு அதைத்தான் சொல்லியது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் சமுதாயச் சீர்திருத்த வாதியாகத் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள். இவர் திருவாரூர்க்கு அருகில் உள்ள ஏமப் பேலூர் எனும் ஏமாப்பூர் என்ற ஊரில் தோன்றியவர். சோழ நாட்டு சைவ அந்தனர் மறபில் பிறந்தவர். மிகச் சிறந்த சீலத்தார். உயர்ந்த கல்வி பெற்றவர். கல்வி கேள்விகள் மற்றும் சமய நெரிகளில் சிறந்து விளங்கியவர்.

நமிநந்தியடிகள் திருவாரூர் அரநெறி ஆலயத்தில் திரு வளக்குப் பணி புரிந்தவர். ஆலயத்தில் நாள் தோறும் விளக்கெரிக்க நெய் ஊற்றும் பணியைச் செய்து வந்தார். ஒரு சமயம் அதிசயமாக, எங்கு தேடியும் நெய் கிடைக்காத போது, எண்ணை வானிகம் செய்து வந்த சில சமணர்களிடம் சென்று நெய் தருமாறு வேண்டினார். சமணர்கள் நெய் தர மறுத்தனர். கோபமும், வருத்தமும் அடைந்த நமிநந்தியடிகள் இறைவனிடம் சென்று முறையிட்டார். அப்போது ஆலயத்தின் கருவறையிலிருந்து அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது.

“அடிகளே, கவலைப்படாதீர்கள். அருகில் உள்ள கமலாலய திருக்குளத்துக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விளக் கேற்றுங்கள். விளக்கு எரியும்!”

இறைவன் கட்டளையை சிரமேற் கொண்டு நமிநந்தியடிகள் அவ்வாறே செய்தார். விளக்கு சுடர் விட்டுப் பிரகாசமாக எரிந்தது. அந்நாளிலிருந்து நமிநந்தியடிகள் தண்ணீரிலேயே விளக்கேற்றி இறைவனை வழிபட்டு வந்தார். இதை கண்டவர்கள் வியந்து அடிகளைப் போற்றி மகிழந்தனர். அவர் நெய்க்குப் பதிலாக நீர் விளக்கேற்றியதால் அவ்வூருக்கு “திரு நெய் பேறு” எனப் பெயர் காரணமாயிற்று.

திருவாரூரில் ‘பங்குனி உற்சவ’ வைபவமே பிரம்மோற்சவம் எனப்பட்டது. மாசி மாத அந்த நட்சத்திரத்தில் கொடி யேற்றி பங்குனி மாத ஆயில்யத்தில் தேரோடி உத்திர நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெறும். ‘சந்திர சேகர’ பட்டம் என்ற விழாமுதல் தீர்த்தம் வரை பங்கனி உற்சவம் மிகச்சிறப்பாக இருக்கும். வசந்த விழா, திருத்தேர் விழா, பக்த காட்சி என்ற மூன்று விழாக்களிலும் தியாகராஜப் பெருமான் அசைந்தாடி வருவார்.

‘பங்குனி உத்திரப் பெருவிழாவை’த் திருவாரூர் திருத்தலத்தில் முதன் முதலில் தொடங்கி வைத்தவர் நமிநந்தியடிகள் தான் என்பர். எனவே இவரைப் பற்றி அப்பர் அடிகள்:

“ஆராய்ந்தடித்தொண்டர் ஆணி பொன்
ஆரூர் அகத்தடக்கு
பாரூர் பரிப்பந்தம் பங்குனி
உத்திரம் பார்ப்படுத்தான் !”

என்று சிறப்பித்துப் பாடினார். இதைேய சேக்கிழாரும் “பங்குனியுத் திரமாந்திருநாள் உயர் சிறப்பும் நின்று விண்ணப் பஞ்செய்த படி செய்தருளும் நிலைபெற்றார்” என்கிறார்.

ஒரு சமயம் நமிநந்தியடிகள் திருவாரூர் பங்குனி உத்திரப் பெருவிழாவிற்குச் சென்றார். எண் திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்த எண்ணற்ற பக்தர்களோடு சேர்ந்து இவரும் திருத்தேர் இழுத்தார். வலம் வந்த தேர் நிலை வந்து சேர்ந்தது. அன்று இரவு தொடங்கியதும் தன் ஊர்வந்து சேர்ந்தார்.

“அந்திநேர வழிபாடு செய்ய வேண்டும். நடைபெற்ற திருத்தேர் விழாவில் எல்லா சாதியாரும் வந்திருப்பார்கள். நல்லவர், கெடுமதியாளர் என பலரும் கலந்திருப்பார்கள். தீண்டத் தகாதவர்கள் வந்திருப்பார்கள். அவர்களோடு ஒன்று கலந்து திருத்தேர் இழுத்து வந்தோம். அதனால் தண்மேனி தீட்டாகி விட்டது. நன்கு குளித்த பிறகே இறைவழிபாடு மேற் கொள்ள வேண்டும்” என்று தன்மனைவியிடம் கூறயபடியே “குளிப்பதற்கு வெந்நீர் தயார் செய்துவை. நான் குளித்துவிட்டு தீட்டு நீக்கியபின் வழிபாடு மேற்கொள்கிறேன். வெகு தூரம் நடந்து வந்த களைப்பு. அப்படியே சிறிது நேரம் கண்ணயர்சிறேன்” என்றவர் திண்ணையில் படுத்தார். உறங்க விட்டார்.

நமிநந்தியடிகளின் கனவில் திருவாரூர் பெருமான் தோன்றினார். “அடிகளே, ஆரூர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழாவில் பங்கு பெற்றவர்கள் திருவாரூரில் பிறந்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் சிவ கணங்களே. யாரும் தீண்டத் தகாதவர் அல்லர். எல்லோரும் என் அன்பர்களே” என்று கூறி திருத்தேர் வைபவத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சிவ கணங்களாகக் காட்டியருளினர். அது கண்டு திடுக்கிட்டுக் கண் விழித்த நமிநந்தியடிகள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அரூர் பெருமானின் கருணையை நினைத்து தன் அறியாமையை நீக்கி, கருணையோடு இறைவன் தன்னைத் தடுத்தாட் கொண்ட பெருமையை நினைத்து மெய் சிலிர்த்தார். தீட்டுப் போகக் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் நீக்கிக் குளிக்காமலேயே இறை வழிபாட்டினை மேற்கொண்டார்.

தீண்டாமை என்னும் கொடுமைக்குச் சாவு மணி அடித்த சேக்கிழார் பெருமானின் தெய்வீகப் பாடல் இதோ:

“மேன்மை விளங்குந திருவாரூர்
வீதி விடங்கப் பெருமாள்தாம்
மான அன்பர் பூசனைக்கு
வருவார் போல வந்தருளி
“ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தார்
எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய்” என்ற ருளிச்
செய்தங் கெதிரகன்றார்”

சிவனடியார்களில் நமிநந்தியடிகள் மிகச் சிறந்த பேரன்பராக விளங்கினார். இறையருள் பெற்றவர் இறை அருளால் தண்ணீரிலேயே விளக்கு எரித்தவர். இவரை அப்பர் அடிகள் “நீரினால் விளக்கிட்டமை நீர் நாடு அறியுமன்றோ” என்றும், “தொண்டர்க்கு ஆணி” என்றும் போற்றிப் புகழ்ந்தார்.. அப்படிப்பட்ட தொண்டரே தீண்டாமை கைக் கொண்டு இழிவு, தீட்டு என்று கருதுவாரானால் நம் சைவ சமயம் என்ன ஆகும்? எனவேதான் ஆரூர் பெருமான், எல்லா உடலும் ஈசன் உறையும் கோயில் என்பதனை நமிநந்தியடிகளுக்கு உணர வைத்தார். அதுவே உண்மையான ஞானம். அதனால் ஆரூர் இறைவன் அவரை “ஞானமறையோய்!” என்று அழைத்தார்.

திருநெய்பேறு ஊருக்கு முன்னாலேயே நமிநந்தி அடியார்க்கு அழகிய கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இத்தலத்தை ‘அடியார் கோயில்’ என்றே அழைக்கிறார்கள்.

Tags : Irur ,Shiva Ganesha ,Jainism ,Buddhism ,Jains ,
× RELATED ஓராறு முகமும் ஈராறு கரமும்!