- கொம்பனாய்
- நீலக் கோமலே
- அம்புயா மலை பூசணி
- குண்டலி
- ஆலா போசனி
- அப்ராமி கோனிச்சியா வான்ச் சனவி
- சங்ககிரி
- பார்வதி
- பூங்கொம்பு
திருவானைக்காவல்
பகுதி 2
“கொம்பனை, நீலக் கோமளை, அம்புய மாலை பூஷணி,
குண்டலி, ஆல போசனி, அபிராமி
கொஞ்சிய வானச் சானவி, சங்கரி, வேதப் பார்வதி
குன்றது வார் பொற் காரிகை”
[பூங்கொம்பு போன்றவள், நீல நிற அழகி, தாமரை மாலை அணிந்தவள், சுத்த மாயையாம் சக்தி, ஆலகால விஷத்தை உண்டவள், பேரழகுடையவள், கொஞ்சிக் குலாவுகின்ற, வான் கங்கை போன்ற தூயவள், சங்கரன் மனைவி, வேதங்கள் போற்றிப் புகழும்
பார்வதி, இமயமலையின் நீண்ட தவத்தால் தோன்றிய அழகிய பெண்ணாம் உமை]
[“அம்புலி நீரை” எனத் தொடங்கும் பாடல்]
“ஞால முதல்வி, இமயம் பயந்த மின்,
நீலி, கவுரி, பரைமங்கை, குண்டலி,
நாளும் இனிய கனி, எங்கள் அம்பிகை, த்ரிபுராயி,
நாத வடிவி, அகிலம் பரந்தவள்,
ஆலின் உதரமுள பைங்கரும்பு
வெணாவலரசு மனை வஞ்சி”
[உலகங்கட்குத் தலைவி, இமவான் பெற்ற மின்னல் போன்ற ஒளி உடையவள், நீல நிறத்தி, பொன்னிறம் கொண்டவள், பராசக்தி, மங்கைப் பருவம் கொண்டவள், குண்டலினி சக்தி, என்றும் இனிய கனி போன்றவள், எங்களுக்கு அருள்புரியும் தாய், மூவுலகங்களுக்கும் அன்னை, நாதவடிவாக விளங்குபவள், ஆலிலை போன்ற வயிற்றை உடையவள், பசுமையான கரும்பு போன்ற இனிமை உடையவள், ஆனைக்காவில் வெண் நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள சிவனாரது மனைவி, வஞ்சிக்கொடி போன்றவளுமான அகிலாண்டநாயகி.]
[“ஓல மறைகள்” எனத் தொடங்கும் பாடல்]
கோயிலின் ஐந்தாவது பிராகாரச் சுற்று மதிலைச் சிவபெருமானே சித்தராக நின்று புதுக்கி அருளினார் என்கிறது புராணம். வேலை செய்யும் ஆட்களுக்கு இலையில் திருநீறு மடித்துத் தருவார்; அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, அவரவர் வேலைக்குத் தக்க பொற்காசுகள் காணப்பெறுமாம்! இதனால், ‘திருநீறிட்டான் மதில்’ ‘விபூதிப் பிராகாரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.
‘வேலை போல’ எனத் தொடங்கும் திருப்புகழில்,
“ஆழித் தேர் மறுகிற் பயில் மெய்த்திரு
நீறிட்டான் மதில் சுற்றிய பொற்றிரு
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே”
– என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார்.
கோயிலில், நவதீர்த்தங்கள் எனப்படும் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.1. பிரம்ம தீர்த்தம் – பிரம்மா, தானே படைத்த ஓர் அழகிய பெண்ணைக் கண்டு மோகமுற்றதால், சிவ கோபத்திற்கு ஆளானார். இதற்குப் பரிகாரமாக ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அதில் நீராடி, 40 நாட்கள் கடுந் தவம் இயற்றினார். இத்தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. நான்காம் பிராகார தெற்கு ரத வீதியில் உள்ளது.
பிரம்மனைச் சோதிப்பதற்காக சிவனும் பார்வதியும் தங்கள் வேடங்களை மாற்றிக்கொண்டு செல்ல, பெண் வேடத்திலிருந்த சிவனை அடையாளம் கண்டு மன்னிப்பு கேட்டார் பிரம்மா. பிரம்மோத்ஸவத்தில் 37 ஆம் நாளன்று, பஞ்ச (5) பிராகார உத்ஸவம் நடத்தப்படும் போது, பார்வதி சிவன் போலவும், சிவன் பார்வதி போலவும் வேடம் அணிந்து ஐந்து பிராகாரங்களையும் வலம் வருகின்றனர்.
2. இந்திர தீர்த்தம் – மூன்றாம் பிராகாரத்தில் தென் மேற்கில் காசி விஸ்வநாதர் சந்நதிக்கு அருகிலுள்ளது.
கமலனும் ஆகண்டலாதி (இந்திரன் முதலான) அண்டரும்
‘‘எமது பிரான் என்று தாள் வணங்கிய
கரிவனம் வாழ் ஜம்புநாதர்”
என்று பாடுகிறார் அருணகிரி நாதர். [குருதி புலால் பாடல்]
3. சம்பு தீர்த்தம் – இது பற்றி அருணகிரியார் தம் பாடலில், “உத்தம சம்பு தடாகம்” என்று குறிப்பிடுகிறார். சம்பு முநிவர் சிவனைப் பூஜிப்பதற்காக உண்டாக்கிய புனித தீர்த்தம். இதன் தெற்கே நான்காம் பிராகாரமாக விளங்கும் தென் மதில், சுந்தர பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டதால், அவன் பெயராலேயே “சுந்தர மாறன் திருமதில்” என்று வழங்கப்படுகிறது. இதன் அருகில் முருகன் கோயிலும் உள்ளது.
“துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்பு தடாகமடுத்த தட்சிண
சுந்தர மாறன் மதிட் புறத்துறை பெருமாளே”
என்று இங்கு பாடியுள்ளார்.
4. ராம தீர்த்தம் – கும்பகர்ணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீர ஆனைக்காவில் ஒரு தெப்பக்குளம் வெட்டி, அதன் கரையில் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார் ஸ்ரீராமர். அங்கதன் அமைத்துக்கொடுத்த அந்த லிங்கம் – கரியமாலீஸ்வரர் (நீல ஹரீஸ்வரர் / நீல விண்டீஸ்வரர்) என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
5. ஸ்ரீமத் தீர்த்தம் – மூலவருக்கருகே உள்ள சிறிய ஊற்று
6.அக்னி தீர்த்தம் – மூன்றாம் பிராகாரத்தில் வசந்த மண்டபத்தருகிலுள்ள கிணறு.
7. அகத்திய தீர்த்தம் – தேவி கோயிலில் முதல் பிராகாரத்தில் சந்நதிக்கு முன்பு இருக்கும் பள்ளியறைக்கு அருகிலுள்ள சிறிய கிணறு.
8. சோம தீர்த்தம் – இது ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்திர புஷ்கரணி
9.சூரிய தீர்த்தம் – திருவானைக்கா மேற்கு கோபுர வாயிலைத் தாண்டி, கோயிலுக்குள் நுழையும் போதுள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கருகே உள்ள தெப்பக்குளம். ஆடிப்பூர விழாவின் போது, இங்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
ஆண்டுக்கொருமுறை, ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர், ஆனைக்கா வந்து, கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். திரும்பிச் செல்லும் போது, அவருக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்து வழியனுப்புகின்றனர். ‘குருதி புலால்’ என்ற திருப்புகழில், அருணகிரியார் ரங்கநாதர் பற்றிய குறிப்பு அளித்துள்ளார்.
“கருதிய ஆறங்க வேள்வி அந்தணர்
அரிகரி கோவிந்த கேசவ என்றிரு
கழல் தொழு சீரங்க ராசன்”
[ஆய்ந்து அறிந்த ஆறு அங்கங்களில் [நிருத்தம், ஜோதிடம், சிக்ஷை, வியாகரணம், கல்பம், சந்தஸ்] வல்லவரும், யாகங்கள் புரிபவருமான அந்தணர்கள், “ஹரி ஹரி கோவிந்தா கேசவா” என்று கூறித் துதித்து இரு திருவடிகளிலும் தொழப்படுகின்ற ஸ்ரீ ரங்கராஜன்]ஆனைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் அருணகிரியார் பாடிய 14 திருப்புகழ்ப் பாக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இங்கு முருகப்பெருமான் 6 சந்நதிகளில் காட்சி அளிக்கிறார்.
1. மேற்கு கோபுர வாயிலைத் தாண்டியதும் வரும் மல்லப்ப கோபுரத்தின் வலப்புறம் உள்ள சந்நதியில் (யானை கட்டும் இடம் அருகில்) வள்ளி தெய்வனையுடன் காட்சி தருகிறார்.
2. கார்த்திகை கோபுரம் தாண்டி கொடிமரத்தை அடையும் முன் உள்ள ஒரு சிறிய மேடையில் முத்துக்குமார சுவாமி காட்சி தருகிறார்.
3. கொடிமரம் இருக்கும் ஜம்புகேஸ்வரரின் மூன்றாம் பிராகாரத்தை வலம் வருகையில், அம்பிகை சந்நதிக்குப் போகும் வழியில் பாலதண்டாயுதபாணி நின்றருளுகிறார்.
4. அம்பிகையின் கருவறைக்குப் பின் புறம், வள்ளி தெய்வனையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் ஆறுமுகனின் இரண்டு திருவுருவங்கள் உள்ளன.
5. அம்பிகை சந்நதியை விட்டு, வெளிவருகையில், சம்பு தடாகத்தின் படியில், அரக்கனைக் காலால் மிதித்தவாறு வித்தியாசமான கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார்.
6. ஜம்புகேஸ்வரர் சந்நதியின் முதல் பிராகாரத்தில் வடமேற்குப் பகுதியில், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் நமக்கு அருள்புரிகிறார். திருவானைக்கா என்றதும் நம் நினைவுக்கு வருபவர் கவி காளமேகமே.
சித்ரா மூர்த்தி
