மார்கழி மாதம் எல்லாத் திருமால் ஆலயங்களிலும் கொண்டாடப்படும் உற்சவம் கூடாரவல்லி. ஒரு பாட்டுக்காக நடைபெறும் உற்சவம் என்பது தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள சிறப்பு. திருப்பாவையின் 27 ஆவது பாடல் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று ஆரம்பிப்பதால், இந்த உற்சவத்தை கூடாரை வெல்லும் உற்சவம் என்று சொல்வார்கள். அது மருவி கூடாரை வல்லி என்று ஆகிவிட்டது. இந்தப் பாசுரம் மிக அற்புதமான வைணவத் தத்துவங்களை உள்ளடக்கியது. பகவானின் இயல்புகளைச் சொல்வது.
முதல் வரியே “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா”. இதற்கு என்ன பொருள்? பகவானோடு கூடாதவர்களை கோவிந்தன் வெல்வான் என்று பொருள். திருமங்கையாழ்வாரும் “பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை” என்று திருவல்லிக்கேணி பாசுரத்திலே பாடுகின்றார். தன்னுடைய அடியார்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பகவான், தன் அடியார்களின் விரோதிகளை தன் விரோதிகளாக நினைத்து அவர்களை வெற்றி கொள்ளுகின்றான் என்பது தத்துவம்.
இதற்கு வைணவ உரையாசிரியர்கள் ஒரு சுவாரஸ்யமான பொருளையும் சொன்னார்கள். தன்னிடம் கூடாதவர்களை (கம்சன், இரணியன், இராவணன்) பகவான் வென்றான் என்பது வரலாறு. அப்படியானால் தன்னிடம் கூடிய அடியார்களை பகவான் வெல்வானா என்றால் அதற்கு இரண்டு விதமாகப் பொருள் சொன்னார்கள். ஆம் அவர்களையும் பகவான் வெற்றி கொள்வான்.
எதிர்ப்பாளர்களை அம்பினாலும், அன்புள்ளவர்களிடம் அன்பினாலும் வெற்றி கொள்வான் என்று சொன்னார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அவன் எதிரிகளை வெல்வான்; அடியார்களிடம் தோற்றுவிடுவான் என்று சொன்னார்கள். இது இன்னும் சுவாரஸ்யமான பொருள். இதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். துரியோதனனும் அர்ஜுனனும் பகவானிடம் உதவி கேட்டார்கள். துரியோதனன் கண்ணனின் படைகளைக் கேட்டான். அர்ஜுனன் கண்ணனையே கேட்டான். படைகளை துரியோதனனுக்குத் துணையாக அனுப்பிவிட்டு, கண்ணன் அர்ஜுனனுக்குத் துணையாக நின்றான் .
அப்பொழுது கண்ணன் ஒரு வார்த்தையைச் சொன்னான். “அர்ஜுனா, நான் இந்தப் போரில் நேரடியாக ஆயுதம் எடுக்க மாட்டேன்.” என்றான். இந்தச் செய்தி பீஷ்மருக்குச் சென்றது. பீஷ்மர் எப்படியாவது கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று ஒரு சபதம் செய்தார். பீஷ்மர் கண்ணனிடத்திலே மிகுந்த பக்தி உள்ளவர். ஒருநாள் யுத்தம் மிகப் பயங்கரமாக நடந்தது. பீஷ்மர் ஆயிரக்கணக் கானவர்களை தன்னுடைய பாணத்தால் அடித்து வீழ்த்தினார். இன்னும் சில மணித்துளிகளில் பாண்டவர்கள் சேனையை முற்றிலுமாக அழித்து விடுவார் என்கிற நிலையிலே அர்ஜுனனை பீஷ்மருக்கு எதிராகப் போர் புரியுமாறு கண்ணன் தூண்ட, அவனோ தன்னுடைய தாத்தாவுக்கு எதிராக மிகப்பெரிய யுத்தத்துக்கு தயாராக இல்லாதவன் போல் நடந்து கொண்டான். பார்த்தான் கண்ணன்.
தானே தேரில் இருந்து குதித்து சக்கராயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு பீஷ்மரைக் கொன்றால்தான் ஆயிற்று என்று வேகமாக பீஷ்மரை நோக்கிச் செல்ல, பீஷ்மர் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு கண்ணனைத் தேடி, “கண்ணா, வரவேண்டும் வர வேண்டும். உன்னுடைய கையாலே என்னுடைய முடிவு நிகழ வேண்டும் என்றால் நான் எத்தனைக் கொடுத்து வைத்தவன்? நீ கையில் வைத்திருக்கிற ஆயுதத்தால் என்னை முடித்து விடலாம் “என்று சொல்ல, “இது என்ன வம்பாகப் போய்விட்டது” என்று அர்ஜுனன் அவசரமாக கண்ணனை மறித்து “நீ சொன்னபடி நான் யுத்தம் புரிகிறேன். நீ ஆயுதத்தை எடுக்காதே” என்று அழைத்துச் சென்றான்.
ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் செய்த பகவான் என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சத்தியத்தையும் மீறினானே என்று பீஷ்மருக்கு மகிழ்ச்சி. இப்போது கண்ணன் தோற்றதால் வென்றான் என்பர். இதைத்தான் “ கூடாரை வெல்லும் பகவான் கூடியவர்களிடம் தோற்று வெல்வான் என்று உரையாசிரியர்கள் காட்டினார்கள். ஒரு குழந்தையிடம் விளையாட்டில் தோற்பதை ஒரு தந்தை எத்தனை மகிழ்ச்சியோடு வெற்றியாக நினைத்துக் கொள்வாரோ, அதைப்போல தன்னுடைய குழந்தைகளிடம் பகவான் தோற்று விடுவதைக் கூட வெற்றியாக நினைத்துக் கொள்வான்.
இதில் அற்புதமான வாழ்வியல் செய்தி உண்டு. “தோற்பதாலும் வெற்றி வரும்” சமீபத்தில் பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா தென்கச்சி சுவாமிநாதன் குறித்து ஒரு பதிவு செய்திருந்தார்.அதில் தென்கச்சி சுவாமிநாதனும் சுகிசிவம் அவர்களும் ஓரிடத்திலே பேசப் போயிருந்தார்கள். முதல் பேச்சாக தென்கச்சி சுவாமிநாதன் சில வாழ்வியல் நெறிமுறைகளை தனக்கே உரிய பாணியில் சொல்லி “வெற்றி வெற்றி என்று அலையாதீர்கள். பதட்டமாக இருக்காதீர்கள். எது உங்களுக்கு அமைந்திருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு நிம்மதியாகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் மென்மையாகக் கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.
அடுத்து சுகிசிவம் அவர்கள் “வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படி முயற்சியோடு பாடுபட வேண்டும்? எப்படி வெற்றியை நோக்கி ஒரு குறிக்கோளோடு முன்னேற வேண்டும்? என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களைச் சொல்லி ஒரு மனிதனின் வாழ்வில் அவன் அடைகின்ற வெற்றி என்பது முக்கியமானது என்று சொல்லி முடித்து விட்டார். இப்பொழுது கேட்பாளரிடமிருந்து ஒருவர் எழுந்து “ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். தென்கச்சி சுவாமிநாதன் இருப்பதைக் கொண்டு வாழுங்கள். வெற்றி வெற்றி என்று அலையாதீர்கள் என்று சொன்னார். நீங்களோ எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும். அதற்காக முயற்சிகளை வேகத்தோடு செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள். நாங்கள் எதைப் பின்பற்ற வேண்டும்?” என்று கேட்க அதற்கு பதில் சொல்வதற்காக சுகிசிவம் எழுந்த பொழுது ,‘‘இதற்கு நான் விடை சொல்லுகிறேன் “என்று தென்கச்சி சுவாமிநாதன் எழுந்து தனக்கே உரிய முறையில்,” அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று சொன்னால் நான் சொன்னதைப் பின்பற்றுங்கள். வெற்றி தான் வேண்டும் என்றால் சுகிசிவம் சொன்னதைப் பின்பற்றுங்கள்” என்று சொல்லிவிட்டு அமர்ந்து விட்டாராம்.
இப்படிச் சொன்ன தென்கச்சி சுவாமிநாதன் ஒரு நாள் சேலம் ஜங்ஷனில் பர்வீன் சுல்தானா அவர்களை அழைத்து “என்னைக் குறித்து சில மாணவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதனுடைய முடிவை இப்பொழுது தெரிவித்து இருக்கிறார்கள். அதைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு, என்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று முடிவு சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னாராம்.
இது முக்கியமில்லை. இதற்குப் பிறகு அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் முக்கியம். “உண்மைதானே, தோற்றுவிடத் தயாராக இருப்பவரை யாரால் தான் வெற்றி கொள்ள முடியும்?” என்று சொன்னாராம். இப்பொழுது கூடாரை வெல்லும் பாசுரத்தின் கருத்தைப் பொருத்திப் பாருங்கள். கண்ணனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. காரணம் அவன் பல நேரங்களில் தன் அடியார்களிடம் தோற்று விடவும் தயாராக இருக்கிறான். கணவன் மனைவியிடம் தோற்று விடத் தயாராக இருக்கும் பொழுதும், மனைவி கணவனிடம் தோற்றுவிடத் தயாராக இருக்கும் பொழுதும், இருவரும் தோற்பதில்லை. இருவருமே வெல்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் பாடம்.
