பகுதி -4
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு. தெரிந்து ஏகாதசி விரதம் இருந்தாலும், தெரியாமல் ஏகாதசி விரதம் இருந்தாலும், ஏகாதசி விரதம் அன்று உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தாலும், ஏகாதசி விரதத்தின் பலன்கள் அவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் நற்கதி அடைவார்கள் என்று இக்கதை சொல்கிறது. பல கதைகள் விஷ்ணு பக்தியைப் பறை சாற்றுகின்றன. விஷ்ணுவின் அபிஷேக தீர்த்தமானது எத்தகைய பாவத்தையும் போக்கும் என்றும் சில கதைகள் பேசுகின்றன.
பத்ம புராணத்தின் முடிவில், அதை சொல்லியே உரோமஹர்ஷணர் பலச்சுருதி சொல்லி முடிக்கிறார். பத்ம புராணத்தில் ஒரு பாடலைப் படித்தால், ஒருநாள் செய்த பாவம் போய் விடும். ஒரே ஒரு அத்தியாயத்தைப் படித்தால் அல்லது கேட்டால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். புராணம் முழுவதையும் பக்தியுடன் கேட்டாலும் படித்தாலும் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று இந்தப் புராணம் முடிகிறது.அடுத்ததாக விஷ்ணு புராணத்தின் பெருமையைப் பார்ப்போம்.
விஷ்ணு புராணத்தின் பெருமை
பதினெட்டு புராணங்களையும் மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள். சாத்வீக புராணங்கள் ஆறு, ராஜச புராணங்கள் ஆறு, தாமச புராணங்கள் ஆறு என்று பிரித்திருக்கிறார்கள், அதில் சாத்வீக புராணங்களில் மிக முக்கியமான புராணம் விஷ்ணு புராணம்,விஷ்ணு புராணத்தை புராண ரத்தினம் என்று சொல்லும் வழக்கம் உண்டு.விஷ்ணு புராணம் மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கம் இறைவனை அடைவதே என்று கூறுகிறது. அதற்கான வழி பக்தி, தர்மம், கருணை, சத்தியம் போன்ற நற்குணங்களைப் பேணுவதுதான் என போதிக்கிறது. மனிதர்கள் தங்கள் கடமைகளை உண்மையுடன் செய்தால் இறைவனின் அருள் கிடைக்கும் என்று எடுத்துரைக்கிறது.
விஷ்ணு புராணம் இருபத்து மூன்றாயிரம் (23,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி கூறியவை விஷ்ணு புராணமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தில், விஷ்ணு புராண வரலாறு, பிரபஞ்சத்தின் படைப்பு, காலப் பிரமாணம், வர்ணாசிரமங்கள், பலவிதமான உலகங்களின் படைப்புகள் போன்றவற்றை பற்றிக் கூறுகிறது. உலகம் திருமால் என்கிற விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டது, அவரின் சொரூபமாகவே காட்சியளிக்கிறது, அவரின் எண்ணப்படியே இயங்குகிறது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது.விஷ்ணு புராணத்தின் அமைப்பு ஆறு அம்சங்களாக இருக்கிறது.
முதலாம் அம்சம்: பிரபஞ்சப் படைப்பு.
இரண்டாம் அம்சம்: பூமி, வானுலகம் மற்றும் கிரகங்கள்.
மூன்றாம் அம்சம்: வேதங்களின் பிரிவு மற்றும் தருமங்கள்.
நான்காம் அம்சம்: அரச வம்சங்களின் வரலாறு.
ஐந்தாம் அம்சம்: கிருஷ்ண அவதாரம் மற்றும் லீலைகள்.
ஆறாம் அம்சம்: பிரளயம் மற்றும் முக்தி.
விஷ்ணு புராணம் ஆன்மிகத்தை மட்டுமல்லாமல் சமூக வாழ்க்கையையும் வழிநடத்துகிறது. குடும்ப ஒற்றுமை, நல்லாட்சி, மக்களின் நலன் போன்ற கருத்துகளையும் இது எடுத்துரைக்கிறது. இதனால் இது மத நூலாக மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையை அமைக்கும் நூலாகவும் விளங்குகிறது.விஷ்ணு புராணத்தின் முக்கியமான தத்துவம் பரமாத்ம தத்துவமாகும். இதில் உலகின் ஆதியும் ஆதாரமும் விஷ்ணு எனக் கூறப்படுகிறது. அவர் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளாக விளக்கப்படுகிறார். அனைத்து உயிர்களும் அவரிடமிருந்து தோன்றி மீண்டும் அவரிடமே சேருகின்றன என்பது இந்த தத்துவத்தின் மையக் கருத்தாகும்.
உலகம் எவ்வாறு உருவானது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது. பிரபஞ்சம் பரமாத்மாவின் சக்தியால் உருவாகிறது. படைப்பு, நிலைபெறுதல், அழிவு ஆகிய மூன்று நிலைகளும் இறைவனின் சக்தியால் நடைபெறுகின்றன. இதன் மூலம் உலகம் ஒரு தெய்வீக ஒழுங்கின் கீழ் இயங்குகிறது என்ற தத்துவம் வெளிப்படுகிறது.மனித உடலில் இருக்கும் ஆத்மா அழிவில்லாதது என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது; அது பிறவி பிறவியாகப் பயணம் செய்கிறது. இறைவனை அடையும் வரை இந்த பிறவி சுழற்சி தொடரும் என்று இந்த தத்துவம் விளக்குகிறது.
விஷ்ணு புராணம் மனிதன் செய்யும் நல்லதும் கெட்டதுமான செயல்கள் அவனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கூறுகிறது. இதுவே கர்ம தத்துவமாகும். தர்மமாக வாழ்ந்தால் நல்ல பலன் கிடைக்கும்; அதர்மமாக நடந்தால் துன்பம் வரும் என்று இந்த நூல் எடுத்துரைக்கிறது.விஷ்ணு புராணத்தில் பக்திக்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் போன்ற விஷ்ணுவின் அவதாரங்களை நினைத்து பக்தியுடன் வழிபட்டால் மனிதன் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. பக்தியே இறைவனை அடையும் எளிய மார்க்கமாக இந்த புராணம் வலியுறுத்துகிறது.
மனித வாழ்க்கையின் இறுதி இலக்கு மோட்சம் என்று விஷ்ணு புராணம் விளக்குகிறது. பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு பரமாத்மாவுடன் ஒன்றுபடுவதே மோட்சம். பக்தி, தர்மம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் மூலம் இதை அடையலாம் என்று இந்த நூல் கூறுகிறது.
மொத்தத்தில், விஷ்ணு புராணம் பரமாத்மா, ஆத்மா, கர்மம், பக்தி மற்றும் மோட்சம் போன்ற ஆழமான தத்துவங்களை விளக்கும் ஒரு முக்கியமான புராணமாகும். இந்த தத்துவங்கள் மனிதர்களை ஆன்மிக வளர்ச்சிக்குப் பாதை காட்டுகின்றன. அதனால் விஷ்ணு புராணம் இந்திய தத்துவ மரபில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.இனி இதில் உள்ள அற்புதமான சில கதைகளைப் பார்ப்போம்.
(தொடரும்)
முனைவர் ஸ்ரீராம்
