×

அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

பகுதி – 2

ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தி

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின. சில இடங்களில் நதிகள் பெருவெள்ளம் வந்து ஊரை அழித்ததும் உண்டு. சீனாவில் உள்ள மஞ்சள் நதியை சோகத்தின் நதி (River of Sorrow) என்றே அழைக்கின்றனர். ஏனெனில் இந்த மஞ்சள் நதியில் அடிக்கடி பெருவெள்ளம் ஏற்படும். அப்போது அருகில் உள்ள குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்படும். வயல்களில் மண் மேவிவிடும். இதனால் நதியை கோப ரூபினி என்றும் மற்ற நேரங்களில் சாந்த ரூபினி என்றும் அழைத்தனர். நதி மாதா, உக்கிர தேவியாகவும் இருப்பாள், சாந்தமாக சௌமியாவாகவும் வழங்குவாள். பல நாடுகளில் ஆற்றின் கோபத்தை சாந்தப்படுத்துவதற்காக பல தண்ணீர்ச் சடங்குகள் செய்வது உண்டு.

தாந்திரீகர்கள் நதி தேவியை மகாவித்யா அல்லது மகாதாரா என்று அழைப்பார்கள். மகா தாரா எனப்படுபவள் ஆலகால விஷமுண்ட சிவனைக் காப்பாற்ற தன் முலைப்பாலைக் கொடுத்த பார்வதி தேவி அவள் நம்பிக்கை தாந்த்ரீக சமயத்தில் வழங்கி வருகின்றது. தாந்திரீகம் என்பது சக்தி வழிபாட்டுச் சடங்குகளை உள்ளடக்கியது. தாந்திரீகம் என்ற சமயப் பிரிவு பெண் தெய்வ வழிபாட்டுக்கு முதன்மை தருவதால் சிவனை விட உயர்ந்தவளாக, சிவனை உயிர்ப்பித்து தந்த மகா தாராவைப் போற்றுகின்றனர்.

தாந்த்ரீகர்களே நதியைப் பெண் என்றும் அவள் பூப்படைவாள் என்றும் அவளுடைய பூப்பு நீர் புனிதமானது என்றும் வழிபட்டு வந்தனர். பின்பு நதிக்கரையில் பெண் தெய்வங்களுக்குக் கோவில் எழுப்பி பெண் தெய்வங்கள் பூப்படையும் நாட்களில் உடுத்தியிருந்த ஆடைகளில் குருதிக் கறை இருக்கும் என்று நம்பினர். குருதி பூஜை செய்தனர். சோட்டணிக்கரை பகவதியான ராஜேஸ்வரி தேவி கோயிலில் குருதி கலந்த நீர் என்ற நம்பிக்கையில் குங்குமம் கலந்த நீரைத் தற்காலத்தில் பிரசாதமாக வழங்கி வருகின்றனர். குருதி பூஜைக்கு பெயரைப் பதிவு செய்து பல மாதங்கள் காத்திருக்கின்றனர்.

சுத்தம் + சுகம் + வளம் = நதி

நதியைப் பெண்ணாகவும் தெய்வமாகவும் வாழ்க்கையை வளப்படுத்தும் கொடையாளியாகவும் நம்பி வணங்கும் மரபு இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் காணப்படுகின்றது. குறிப்பாக ஜெர்மனியில் முன்பு வாழ்ந்த செல்த்திக் பிரிவினர் நதியைத் தூய்மை, சுகமாக்குதல், வளமை என்ற மூன்று காரணங்களால் நதிகளைப் பெண் தெய்வமாக போற்றினர். நதியே மறு உலகத்தின் வாசற்படி என்றும் நம்பினர். இப்பெண் தெய்வம் தலையில் மகுடம் சூட்டி கையில் வாள் மற்றும் தலையோடு ஏந்தி இருப்பாள். இவளே பிறப்பு இறப்பு இரண்டுக்கும் அதிபதியானவள் என்பதால் இத்தகைய உருவ அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நோய் தீர்க்கும் தீர்த்தமாடல்

நதிக் கரையில் அல்லது நதி நீரில் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்தால் உடலில் நோய் தாக்காது நோய் இருந்தாலும் நதிநீர் அற்புத சுகம் அளிக்கும் என்று மக்கள் நம்பினர். இன்றைக்கு இந்நம்பிக்கை புனித தீர்த்தம் ஆடல் என்று வழங்கப்படுகிறது. பல்வேறு புனிதத் தலங்களில் நதிகளில் குளித்து எழுந்தால் நோய் தீரும் பாவம் தொலையும் பிறவி தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அற்புத சுகமளிக்கும் நீர் நிலைகள்

ஐரோப்பாவில் ஹீலிங் ஸ்பிரிங்ஸ் என்ற நோய் தீர்க்கும் நீரூற்றுகள் உள்ளன. இவற்றிற்கு அப்பல்லோ தெய்வமாக விளங்குகின்றார். அப்பல்லோவுக்கு இணையான கிரானோஸ் (Chronos) போர்வெ (Borvo) போன்ற ஆண் தெய்வங்களும் வணங்கப்பட்டன. இந்தியாவில் நாட்டுப்புறத் தெய்வங்கள் சைவ சமய எழுச்சிக்கு பிறகு வைதீக தெய்வங்களாக மாற்றம் பெற்றதைப் போன்று ரோமர்கள் ஆட்சி வந்த பின்பு செல்த்திக் இனத்தவரின் தெய்வங்கள் ரோமக் கடவுளரின் பெயர்களுக்குள் சங்கமம் ஆயின.

பண்பாட்டுப் பதிவான ஸ்தல புராணக் கதைகள்

நீர் வழிபாட்டின் தொடர்ச்சியைத் தலபுராணக் கதைகளில் காணலாம். சபிக்கப்பட்டவர்கள் பூலோகத்திற்கு வந்து ஒரு குளம் வெட்டி அந்தத் தீர்த்தத்தில் தினமும் குளித்து எழுந்து அருகில் ஓர் மர நிழலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் அவர்களுடைய பாவம் நீங்கி மீண்டும் மேலோகம் செல்வார்கள். அல்லது ஒரு நதியில் குளித்து அருகில் சிவபூஜை செய்து வர அவர்களின் பாவம் நீங்கும்.

இக்கதைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல. இவை நதிநீர் வழிபாட்டின் தொடர்ச்சியைக் குறிக்கும் சமய வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவாகும். ஆற்றுநீரில் குளித்தால் நோய் நீங்கும் அற்புத சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஜெர்மன் நாட்டிலும் நிலவியது. கீழை நாடுகளிலும் வழங்கியது. நீர் தொடர்ச்சி புண்ய தீர்த்த நோய் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியே புனித தீர்த்தமாடலாகப் புது பரிமாணம் பெற்றுள்ளது.

புண்ணிய நதிக்குப் பொன் காணிக்கை

நதி நீருக்கு பொன்னும் பொருளும் பூவும் கனியும் காணிக்கையாக அளிக்கும் பழக்கம் உலகெங்கும் இருந்து வந்தது. ஜெர்மன் பகுதியில் வாழ்ந்த செல்த்திக் இனத்தினர் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நதிக்கு வழிபாடு நடத்துவார்கள். அப்போது நாம் இங்கு காசுகளை ஆற்றில் எறிவதுபோல இவர்கள் உணவையும் மெழுகையும் ஆற்றில் எறிந்து வணங்குவர். ஐரோப்பாவில் ஆற்றில் தங்கம் வெள்ளி காசு ராயும் பழக்கம் இருந்தது. மேலும் ஆற்றில் குளித்து நோய் சுகமாகி இருந்தால் நோய் பாதிக்கப்பட்ட உறுப்புகளை செம்பினாலும் மரத்தினாலும் செய்து நதிக்கடவுளர் கோவிலில் வைப்பார்கள்

நதிகளே குலத் தோன்றல்

நதிகள் ஐரோப்பியாவில் குலக் குறிகளாக (totem) விளங்கின. அதாவது குறிப்பிட்ட நதிக்கரையில் வாழும் மக்களின் குலத் தோன்றல் அந்த நதியே ஆகும். குறிப்பிட்ட நதியே தன் முன்னோர் என்றும் அந்த நதியிலிருந்து தோன்றியவர்களே தங்கள் இனம் என்றும் அவர்கள் நம்பினர். இதனால் நதியை அவர்கள் அழுக்காக்குவதில்லை. நதியைத் தெய்வமாக வழிபட்டனர். இங்கும் நதியில் எச்சில் துப்பக் கூடாது. சிறுநீர் கழிக்கக் கூடாது. நீர் நிலையை நோக்கி இருந்து மல ஜலம் கழிக்கக் கூடாது என்ற விதி இருப்பதன் காரணம் நதி ஒரு தெய்வம் என்பதால் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் அதன் புனிதத்தைக் காக்க வேண்டும் என்ற கருத்தாக்கமே ஆகும்.

ஆட்பெயர்களும் இடப் பெயர்களும்

நதியின் அடிப்படையில் ஆட் பெயர்களும் இடப்பெயர்களும் வழங்கின. இந்திய மரபில் காவேரி கங்கா நர்மதா என்று நதியின் பெயரைப் பெண்களுக்கு சூட்டப்படுகின்றது. காவிரியின் பெயரில் காவேரிப்பட்டணம், பூம்புகார் போன்ற ஊர்ப்பெயர்கள் இருப்பதுபோல ஐரோப்பாவிலும் லியோனா நதியின் பெயரால் டியோநா (Deuona) என்ற ஊர் அழைக்கப்பட்டது.

ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு தேவதையின் ராஜ்ஜியமாக கருதப்பட்டது. எனவே நதிக்கும் அதன் கரையில் இருக்கும் ஊருக்கும் ஒரே பெயர் வழங்கியது. செல்டிக் இனத்தவர்கள் நதியைத் தாய் என்றே அழைத்தனர். மேத்ரஸ் (Matres) என்றால் தாய். தண்ணீர் தேவதை சிரோனா என்று அழைக்கப்பட்டாள். மோட்ரோன், மபோன், மத்ரோணா (Modron, Mabon Matrona) என்று தாய் என்ற பொருளிலேயே அயர்லாந்து மக்களும் அழைத்தனர். இந்தியாவிலும் கங்கையம்மன், காவிரி அன்னை என்று நதிகளைத் தாயாகக் கருதும் சமயமரபு பின்பற்றப்படுகின்றது. இதே மரபு ஐரோப்பாவில் ஜெர்மனியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் இருந்து வந்துள்ளது. அங்கே ஏராளமான நதி தேவதைகள் அன்னை என்ற பெயரில் கிறிஸ்துவ சமயம் பரவும் வரை வணங்கப்பட்டு வந்தன.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : Yellow River ,China ,
× RELATED ஈரூரில் பிறந்தார் எல்லாம் சிவகணங்களே!