நத்தம், மார்ச் 31: நத்தம் அருகே சமுத்திராப்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஊரணியிலிருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
தொடர்ந்து பத்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றிரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, அதிர்வேட்டுகளுடன் மின்ரதத்தில் ஊர்வலமாக சென்று இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சமுத்திராபட்டி, சடையம்பட்டி, சம்பைப்பட்டி, ஏரக்காபட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திராப்பட்டி கிராமமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
