சேலம், மார்ச் 28: சேலம் கருப்பூரை அடுத்த சேனைக்கவுண்டனூர் மூங்கில்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா (27). இவரது கணவர் சக்ரவர்த்தி. இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவர் சக்ரவர்த்தி, விவாகரத்து கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரும் சேர்ந்து வாழுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து கணவர் வீட்டிற்கு சென்றவரை மாமியாரும் மாமனாரும் வீட்டிற்குள் வரக்கூடாது என கதவை சாத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் சேர்த்து வைக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சூரமங்கலம் மகளிர் போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் வீட்டிற்கு சென்றபோது, மாமியார் அடித்து வெளியே போகுமாறு இழுத்து போட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சொர்ணாவும், குழந்தையும் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொர்ணாவும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தன்னை சூடுவைத்து கொடுமைப்படுத்திய மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
