×

தேர்தல் பொதுப்பார்வையாளர் ஓமலூர் தொகுதியில் திடீர் ஆய்வு

ஓமலூர், மார்ச் 24: ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் திக் விஜய்சிங் ஜடேஜா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓமலூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, மொத்த வாக்காளர்கள் விபரம் குறித்து கேட்டறிந்த அவர், பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, ஓமலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவித் தேர்தல் அலுவலர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்றார். அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பள்ளி குழந்தைகள், தேர்தல் பொதுப்பார்வையாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகளிடம் அவர் நலம் விசாரித்தார். அப்போது, மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியது அவரை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர், அப்பகுதியை சேர்ந்த பெண் வாக்காளர்களிடம் பேசிய அவர், வாக்களிக்க வரும்போது ஏதேனும் இடையூறுகள் அல்லது அச்சம் ஏற்படுகிறதா? இதற்கு முன்பு இந்தப் பகுதிகளில் தேர்தல் நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதா? என்று கேட்டறிந்தார். அதற்கு பெண்கள், இங்கு எப்போதும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடக்கும். எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலோ, பிரச்னைகளோ கிடையாது என தெரிவித்தனர்.

Tags : Election Observer General ,Omalur ,Dig Vijaysingh Jadeja ,
× RELATED மகனை தேடி சென்ற மீன் வியாபாரி மாயம்