×

மாறுபட்ட அணுகுமுறையில் துளி

நன்றி குங்குமம் தோழி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஆடைகளை நேரடியாக வழங்கி உதவும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், ‘துளி’ அதைவிட வேறுபட்ட அணுகுமுறையை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக உதவி பெறுபவர்களின் மரியாதையும் தன்னம்பிக்கையும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் இவர்களின் முயற்சி இன்று பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சென்னை அடையாரில் இயங்கி வரும் ‘துளி’ என்ற சமூக முயற்சி, உதவி செய்வதற்கான ஒரு புதுமையான வழியினை முன் வைத்துள்ளது.

நாம் அதிகம் பயன்படுத்தாத பொருட்களை தேவையில்லை என்று கிடங்கில் போடுவதை தவிர்த்து அதை மறுபயன்பாட்டு பொருட்களாக மாற்றும் ேபாது, அது தேவையுள்ள மற்றவர்களுக்கு புதிய பொருளாக கிடைக்கும். இது போன்ற சுழற்சி முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், நிலைத்தன்மையை கடைப்பிடிக்கவும் உகந்த வழியாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்கள் எந்த தயக்கமுமின்றி இலவசமாக ஆடைகள் வாங்க உதவுகிறது துளி. ஐ.டி நிறுவனத்தை நடத்தி வரும் மூன்று நண்பர்களின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் ‘துளி அங்காடி’யில் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த அங்காடியில் தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார்கள் என்பது பாராட்டத்தக்க விஷயம்.

துளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அங்காடியின் ஸ்டோர் மேனேஜராக பொறுப்பேற்றிருக்கும் தீபா விளக்கினார்.“அஜித்குமார், சிவாஜி பிரபாகரன் மற்றும் ஜெய் பாலா ஆகிய மூவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்கள். பாமர மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அடையாரில் துளி ஆடையகத்தை இவர்கள் மூவரும் இணைந்து துவங்கினார்கள். இதற்காக சேகரிப்பு மையம் ஒன்றும் இயங்கி வருகிறது. தங்களிடம் உபயோகத்தில் இல்லாத நல்ல நிலையில் உள்ள ஆடைகளை மக்கள் இங்கு நன்கொடையாக அளிக்கின்றனர்.

ஆடைகளை சேகரிப்பதற்கு ஆங்காங்கே கலெக் ஷன் ட்ரைவ் நிகழ்த்தப்படும். இவ்வாறு சேகரிப்பு மையத்தில் வந்து சேரும் ஆடைகள் மற்றும் பொருட்கள் தரம் பிரித்து நன்றாக சலவை செய்யப்படும். பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான துணிகள் என தனித்தனியாக பிரிக்கப்படும். அவற்றை அயர்ன் செய்து, இங்கு கடைக்கு எடுத்து வரப்படும். ஆடைகள் மட்டுமில்லாமல் காலணிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் நாங்க கடையில் வைத்திருக்கிறோம்.

இங்குள்ள பெரும்பாலான பொருட்கள் புதிது போலவே இருக்கும். சில நேரங்களில் துணிகளில் உள்ள விலைப் பட்டியல் கூட பிரிக்கப்படாமல் எங்களிடம் கொடுப்பார்கள். அளவு சரியில்லாமலோ அல்லது வாங்கிவிட்டு உபயோகம் செய்யாமலேயே சிலர் பொருட்களை அப்படியே வைத்திருப்பார்கள். அது போன்ற பொருட்களைதான் எங்க சேகரிப்பு குழுவினர் கொண்டு வருவார்கள்’’ என்றவர் துளி இயக்கம் குறித்து பகிர்ந்தார்.

“துளி ஆடையகம், பாமர மக்களை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. பெரும்பாலும் இங்கு கஷ்டப்படும் மக்களே வருகின்றனர். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம். அதற்கான சில வழிமுறைகள் உள்ளன. முதன்முறையாக துளி அங்காடியில் பொருட்களை வாங்க வருபவர்கள் தங்களது குடும்ப அட்டையை கொண்டுவரவேண்டும். அதன் அடிப்படையில் குடும்பத்தினர் எண்ணிக்கை பொறுத்து அவர்களுக்கு பாயின்ட்ஸ் கொடுக்கப்படும்.

உதாரணத்திற்கு 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 2000 பாயின்ட்ஸ் கொடுக்கப்படும். இங்குள்ள ஒவ்வொரு பொருளுக்கும் விலைக்கு பதிலாக பாயின்ட்ஸ் குறிப்பிடப்பட்டிருக்கும். மொத்தமாக ஒரு குடும்பத்திற்கு கொடுக்கப்படுகின்ற மொத்த பாயின்ட்ஸ் மதிப்பிற்கு ஆடைகளையும் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இங்கு எல்லாமே இலவசம் என்றாலும், இந்த பாயின்ட் சிஸ்டம் மூலம் இங்கு பொருட்களை வாங்க வருபவர்கள், எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நம் கையில் உள்ள பாயின்ட்ஸ் மதிப்பிற்கு பொருட்களை வாங்குகிறோம் என்கிற மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாங்கிச் செல்கிறார்கள்.

மட்டுமின்றி, இதுபோன்று ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பினை வரையறுத்து வைக்கும் போது சில குறிப்பிட்ட பொருட்களையே வாங்க முடியும். இதனால் எல்லோருக்கும் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு குடும்பத்தினர் ஒருமுறை வந்து பொருட்களை வாங்கி சென்றால், அடுத்த ஆறு மாதம் கழித்து தான் அவர்கள் மீண்டும் பொருட்களை வாங்க முடியும். பண்டிகை காலங்களில் கூட குடும்பமாக வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் எந்தவித தயக்கமுமின்றி அவர்களுக்கு தேவையான ஆடைகளை வாங்க வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களால் வெளியில் வாங்க முடியாத ஆடைகளும் பொருட்களும் இங்கு கிடைத்ததும் மகிழ்ச்சியடைவார்கள். வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் உழைக்கும் பெண்களால் ஆடைகளுக்கென்று பிரத்யேகமாக செலவு செய்ய முடியாது. அவர்களுக்கான ஆடைகளை இங்கு வாங்கி மன நிறைவுடன் செல்கிறார்கள். சிறு பிள்ளைகளாக இருக்கும் போதிலிருந்து இங்கு ஆடைகளை வாங்கிச் செல்லும் சிறுவர்களும் உள்ளனர். முதன்முறையாக இங்கு வாங்கிய ஆடைகளை கூட அப்படியே வைத்திருப்பதாக சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். துளி அங்காடி குறித்து அறிந்து வெகு தொலைவில் இருந்து கூட வருகிறார்கள்.

மூன்று நண்பர்களால் துவங்கப்பட்ட இந்த அங்காடி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. முதலில் அடையாறில் துளி அங்காடி திறக்கப்பட்டது. மக்களின் தேவையை கருதி வடபழனி பகுதியிலும் ஒரு கிளை திறக்கப்பட்டு மக்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு.

இதன் சேவையை பற்றி அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, வடபழனி கிளையின் பராமரிப்புக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளார். நாங்கள் சேகரித்து புதுமைப்படுத்தும் ஆடைகளை தவிர்த்து, அவர் துளி அங்காடிக்கு தன் செலவில் புது ஆடைகளை வாங்கி வழங்கி வருகிறார். பாமர மக்கள் பலரும் பயன்பெற்று வரும் துளி அங்காடியில் என்நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அஸ்வின், பரணி போன்ற தன்னார்வலர்களும் மன நிறைவுடன் தங்கள் பொறுப்பினை செய்து வருகின்றனர்” என்றார்.

செய்தி: ரம்யா ரங்கநாதன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED நாங்க டிசைனரின் 5 ஸ்டெப் பயிற்சிதான் அளிக்கிறோம்!