நன்றி குங்குமம் தோழி
உடைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒருவர் தனக்கான உடையினை நேர்த்தியாக அணியும் போது அதற்கு பின் அந்த உடையினை தைத்து தந்தவரின் திறமையைதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட திறமைசாலிகளை உருவாக்கி வருகிறார் சென்னையை சேர்ந்த சத்யா. இவர் தன் கணவர் கோமணியுடன் இணைந்து தையல் கலையினை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் ‘சத்யா கோமணி அகாடமி’ என்ற பெயரில் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் அந்த பிசினஸை எவ்வாறு நேர்த்தியாக நடத்தலாம் என்றும் ஆலோசனையும் வழங்கி வருகிறார்.
‘‘என்னோட சொந்த ஊர் திருநெல்வேலியிலுள்ள விக்ரமசிங்கபுரம் என்ற கிராமம். தற்போது திருமணமாகி சென்னையில் செட்டிலாகிட்டேன். கிராமத்தில் அப்பா சிறிய அளவில் ஜவுளிக் கடை ஒன்றை நடத்தி வந்தார். அப்பாவின் கடைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் தையலை கற்றுக் கொண்டேன். பள்ளிப் படிப்பிற்கு பிறகு கல்லூரிப் படிப்பிற்காக சென்னைக்கு வந்தேன். முதுகலைப்பட்டம் ஆங்கிலத்தில் பெற்றிருக்கிறேன். படிப்பு முடிச்சதும் சென்னையில் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் எனக்கு திருமணமானது. அவர் சென்னை என்பதால், நான் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டேன்’’ என்றவர், ஆசிரியர் பணியில் இருந்து தையல் துறையினை தேர்வு செய்தது குறித்து விவரித்தார்.
‘‘அப்பா ஜவுளிக் கடை வைத்திருந்ததால், எனக்கு சின்ன வயசில் இருந்தே ஃபேஷன் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. ஆனால், படிப்பு முடிச்சதும் எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்ததால் அதனை தொடர்ந்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய தொழிலை மேம்படுத்த ஆசிரியர் துறையில் மேலும் படிக்கலாமா அல்லது ஃபேஷன் துறையை தேர்வு செய்யலாமா என்று யோசித்த போது என்னுடைய விருப்பம் தையல்தான்னு புரிந்தது. ஃபேஷன் டிசைனிங் படித்தேன்.
பயிற்சியில் சேர்ந்த இரண்டு மாதத்தில் கருவுற்றதால், என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதனால் ஆன்லைனில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு தைத்துக் கொடுத்தேன். அப்போதுதான் எனக்கு மற்றவர்களுக்கு தைத்துக் கொடுப்பதைவிட அதை சொல்லிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஒரு பயிற்சி மையமாக அமைக்க மூலதனம் தேவை.
நாங்க சாதாரண நடுத்தர குடும்பத்தைச் ேசர்ந்தவங்க. அந்த சமயத்தில் பெரிய அளவில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய முடியாது என்பதால் இன்ஸ்டா பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் நான் செய்யும் வேலையினை பதிவு செய்தேன். அதை பார்த்து தஞ்சையில் இருந்து வினோதினி என்ற பெண்மணி என்னுடைய வேலைப்பாடு நன்றாக இருப்பதாகவும், அதை ஆன்லைனில் சொல்லித்தர முடியுமான்னு கேட்டாங்க.
அப்படித்தான் நான் ஆன்லைன் பயிற்சியினை ஆரம்பித்தேன். இரண்டு குழந்தைகள் வைத்துக் கொண்டு, எனக்கு ஆன்லைன் முறையில் சொல்லிக் கொடுப்பது வசதியாக இருந்தது. கிடைக்கும் நேரத்தில் வீடியோவினை எடுத்து அதை அப்லோட் செய்து விடுவேன். இதைத் தவிர இன்ஸ்டாவில் டிப்ஸ் குறித்த வீடியோவும் வெளியிட ஆரம்பித்தேன். அதைப் பார்த்து பலரும் தனித்தனி பயிற்சிக்கு பதில் ஒரு முழுமையான பயிற்சியை சொல்லித்தர கேட்டாங்க. டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங் ஆறு மாத பயிற்சியினை அறிமுகம் செய்தேன். இந்த இரண்டு வருடங்களில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன்’’ என்றவர் இதற்காக தனிப்பட்ட ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
‘‘ஆன்லைன் பயிற்சி சில சமயம் நேரடியாக எடுக்கும் போது பலரால் அதில் பங்கு பெற முடியாமல் போகும். அதனால் தனிப்பட்ட ஆப் ஒன்றினை அறிமுகம் செய்து, அதில் பயிற்சி வீடியோக்களை பதிவு செய்தோம். இதன் மூலம் அவர்கள் நேரம் கிடைக்கும் போது வீடியோக்களை பார்த்து பயிற்சி பெறலாம். ஆப் மூலம் மட்டுமே 70 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆப் மூலமாக தையல் பயிற்சியினை அறிமுகம் செய்தது நாங்கதான் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கு. ஆரம்பத்தில் எங்க வீட்டில் ஒரு சிறிய பகுதியில் டேபிள் சேர் போட்டு என் மொபைல் போனில் ரிங் லைட் வைத்து தான் ஷூட் செய்தோம். இப்போது எங்க வீட்டில் ஒரு பகுதியினை அகாடமியாக மாற்றி 12 பெண்களை வேலைக்காக நியமித்திருக்கிறோம். ஆன்லைனில் படித்த என் மாணவர்கள் இப்போது தனியாக பிசினஸ் செய்து வருகிறார்கள்’’ என்றவர் ஆண், பெண் என அனைவருக்குமான உடைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.
‘‘உடைகள் தைப்பது குறித்த பயிற்சி மட்டுமில்லாமல், இலஸ்ட்ரேஷன், கலர் தியரி, ஆரி வேலைப்பாடுகள், டிரேப்பிங், பொருட்களை மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, பொருளுக்கான விலை நிர்ணயம், பொட்டிக் ஆரம்பிப்பது, ஜி.எஸ்.டி வரை எல்லாமே சொல்லிக் கொடுக்கிறோம். ஆப் மூலம் அவர்கள் விரும்பும் பயிற்சியினை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.
அதில் லைவ் பயிற்சிகளும் இருக்கும், ரெக்கார்டிங் செய்யப்பட்ட பதிவுகளும் இருக்கும். பயிற்சி எடுக்கும் போது சில சந்தேகங்கள் வரும். அதற்காக ஸ்பெஷலிஸ்டுகளை நியமித்து இருக்கிறோம். அவர்கள் 365 நாட்களும் மாணவர்களின் சந்தேகத்தினை தீர்க்க இருப்பார்கள்’’ என்றவர், தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இதனை அமைக்க இருக்கிறார். அதன் பிறகு நேரடி வகுப்புகளும் எடுக்க இருப்பதாக தெரிவித்தவரை தொடர்ந்தார் அவரின் கணவரான கோமணி.
‘‘ஆப்பில் கட்டண பயிற்சி மட்டுமில்லாமல் சில இலவச பயிற்சியினையும் வழங்கி வருகிறோம். எங்களிடம் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்தான் பயிற்சி எடுக்க முன்வராங்க. அங்களுக்கு டெக்னாலஜி அவ்வளவு எளிதாக பயன்படுத்த தெரியாது. ேமலும், ஆன்லைனில் கட்டணம் செலுத்தினா ஏமாத்துவாங்கன்னு நினைப்பாங்க. அவங்களுக்கு முதலில் இது நம்பிக்கையான பயிற்சி என்ற புரிதல் வரணும். அதற்காக நாங்க ஆப்பினை ஆரம்பிக்கும் போது சில பயிற்சிகள் அதாவது, உடை தைப்பதற்கான அளவினை எவ்வாறு எடுப்பது, சுடிதார் பேன்ட் கட்டிங் மற்றும் தைப்பது என நிறைய சின்னச் சின்ன வீடியோக்களை இலவசமாக வழங்கினோம்.
நாங்க அப்படி போட்ட போது பலரும் எங்களிடம் கேட்டது, ‘இலவச பயிற்சி அளிக்கும் போது எதற்கு நான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று எண்ணம் ஏற்படுமே’ என்றார்கள். ஆனால், அதுதான் எங்களின் சக்சஸுக்கு காரணம். எல்லாவற்றையும் இலவசமா கொடுக்க முடியாது. மாசம் ஒரு கிளாஸ் இப்படி இலவசமா கொடுப்போம். அதைப் பார்த்து பயிற்சி எடுத்தவர்கள் அடுத்த கட்டத்திற்கு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு உண்மையாக முன்னேற வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் எங்களின் மாணவர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட பயிற்சியும் தரமாக கொடுத்தால் கண்டிப்பாக மாணவர்கள் நம்மைத் தேடி வருவாங்க.
ஒரு துணியினை டெய்லர் மற்றும் டிசைனர்கள் முறையில் இரண்டு விதமாக தைக்கலாம். டெய்லர் அளவு உடையினை பொருத்துதான் தைப்பார்கள். ஆனால், டிசைனர்கள் அப்படி செய்ய மாட்டாங்க. முதலில் உடைக்கு ஏற்ற உடல் அளவினை எடுப்பார்கள். அடுத்து அதற்கான ஒரு ஷீட்டில் பேட்டர்ன் டிசைன் செய்து கத்தரித்துக் கொள்வாங்க. அந்த ஷீட்டினை துணியின் மேல் விரித்து கத்தரிக்கும் போது ஒருவரின் அளவு பெர்பெக்டா வரும்.
ஆனால், தைத்த பிறகு தவறு ஏற்பட்டால், எங்கு தப்பு செய்திருக்கிறோம் என்பதை ஷீட்டின் அளவினைக் கொண்டு கண்டுபிடித்துவிடலாம். துணியினை கத்தரித்த பிறகு உடைகளை தைத்து அதை வாடிக்கையாளர்களிடம் போட்டுப் பார்க்க சொல்வோம். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை சரி செய்து தருவோம். இது தான் புரொபஷனல் டிசைனர்கள் செய்வாங்க. அதே முறையினைதான் நாங்களும் பின்பற்றி வருகிறோம்’’ என்றார் கோமணி.
தொகுப்பு: ஷன்மதி
