நன்றி குங்குமம் தோழி
குளுகுளு பனிக்காலம் போயாச்சு… கொளுத்தும் வெயில் ஆரம்பிச்சாச்சு. இனி இளநீர், கரும்புச் சாறு, ஐஸ்கிரீம், பழச்சாறு என நம் மனம் அதை தேட ஆரம்பிக்கும். எவ்வளவு குளிர்பானங்கள் இருந்தாலும் நம்முடைய முதல் சாய்ஸ் எப்போதும் ஐஸ்கிரீம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐஸ்கிரீம் என்றாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட ஐஸ்கிரீமுக்கு ரோமானிய காலத்தில் ஒரு குட்டிக் கதை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரோமானிய பேரரசர் நீரோ கிளாடியஸ் சீசர் மலையிலிருந்து பனிக்கட்டியை சேகரித்து அதில் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை கலந்து ஐஸ்கிரீமாக சாப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.
ஐஸ்கிரீம் அனைவரின் ஃபேவரைட் என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே. காரணம், அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொழுப்பால் எடை அதிகரிப்பு, பல் சொத்தை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இதனை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதே மருத்துவர்களின் அட்வைஸ். ஐஸ்கிரீம்களில் வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், பிஸ்தா போன்ற ஃப்ளேவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நினைக்க முடியாத பழங்கள், காய்கறிகள், மசாலாக்கள் கொண்டு 250 வகையான ஐஸ்கிரீம்களை தயாரிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படிப்பட்ட ஐஸ்கிரீம்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ‘சில் அண்ட் ஹீல்’ ஐஸ்கிரீம் நிறுவனர் லதா ராஜா. இவர் தயாரிக்கும் பாகற்காய், துளசி, முருங்கைக் கீரை, மிளகு, பச்சை மிளகாய் ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு ஃபேவரைட்டாக மாறி வருகின்றன.
‘‘நான் கோயம்புத்தூர் பொண்ணு. படிச்சது, வளர்ந்தது எல்லாமே அங்க தான். பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சேன். திருமணத்திற்குப் பிறகு ஹோட்டல் ஒன்றில் கெஸ்ட் ரிலேசன் எக்ஸ்கியூடிவாக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு படிப்படியாக மேனேஜராக உயர்ந்தேன். 11 வருட வேலை அனுபவத்தால், பேச்சுத் திறமை, மக்களுடைய தொடர்பு எல்லாமே கிடைச்சது. என் கணவருக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்பது விருப்பம். நான் ஹோட்டல் துறையில் இருந்ததால் என்னவோ அவர் பிசினஸ் என்று சொன்னதும், ஃபுட் பிசினஸ் செய்யலாம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. உடனே களத்தில் இறங்கினேன்.
எனக்கு வீட்டு உணவினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அதே சமயம் அவர்களுக்குப் பிடிக்கும் உணவினை கொடுக்க திட்டமிட்டேன். பள்ளிகளை அணுகினேன். விரும்பும் குழந்தைகளுக்கு மதிய உணவினை கொடுப்பதாக கூறினேன். அதில் 40 குழந்தைகள் எனக்கு வாய்ப்பினை கொடுத்தார்கள். அவர்களுக்கு மதிய உணவினை வீட்டில் இருந்தபடி சமைத்து வழங்க ஆரம்பித்தேன்.
அதனைத் தொடர்ந்து வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வீட்டு விசேஷங்கள் என 100 பேருக்கு வீட்டிலிருந்து சமைத்து கொடுத்தேன். பொதுவாக ஹோட்டலில் உணவினை ருசியாக கொடுக்க என்ன செய்வார்கள் என்று அந்த துறையில் நான் வேலை பார்த்ததால் தெரியும். அதெல்லாம் நான் சேர்க்காமல் வீட்டில் அம்மா செய்வது போல் செய்து கொடுத்தேன்’’ என்றவர், கேட்டரிங் மட்டுமில்லாமல் ஹோம் மேட் கேக்ஸ், பிஸ்கெட்ஸ், பிரௌனிசும் விற்பனை செய்து வந்துள்ளார்.
‘‘வீட்டு சமையல் செய்து கொடுக்கலாம். ஆனால், கேக் எல்லாம் பயிற்சி அவசியம். அதனால் அதனை முறையாக கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பது விதி. நான்கு வருடங்களுக்கு முன் என் கணவர் தவறிட்டார். அதன் பிறகு என் வாழ்க்கை ஒரு சவாலாக மாறியது. இரண்டு பசங்க. அவங்கள படிக்க வைக்கணும், கரை சேர்க்கணும். அதற்காக ேமலும் உழைக்க ஆரம்பித்தேன்’’ என்றவர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்தார். ‘‘குழந்தைகள் பொதுவாக காய்கறி, பழங்களை சாப்பிட மாட்டார்கள்.
என் மகளும் அப்படித்தான். ஆனால், அவளுக்கு ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவளை பழங்கள் சாப்பிட வைக்க அவளுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம்களை பழக்கூழ்கள் சேர்த்து தயாரித்து கொடுத்தேன். பேக்கரி வகுப்புக்கு சென்ற போது என்னென்ன ரசாயனப் பொருட்கள் உணவில் சேர்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதால், அவற்றை எல்லாம் தவிர்த்து எந்தவித கலப்படமும் இல்லாமல் நான் செய்த ஐஸ்கிரீம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அப்போதுதான் இதையும் ஒரு பிசினஸாக செய்தால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஐஸ்கிரீம் கொடுக்க முடியும் என்று தோன்றியது.
‘சில் அண்ட் ஹீல்’ பெயரில் 2018ல் தேனியில் ஹோம்மேட் ஐஸ்கிரீம் கடையினை ஆரம்பித்தேன். வீட்டில் ஐஸ்கிரீம்களை தயாரித்து கடையில் விற்பனை செய்தேன். ஆரம்பத்தில் எல்லோருக்கும் தெரிந்த வெனிலா, சாக்லேட் ஃபிளேவர்களையே செய்தேன். ஆனால், என் வாடிக்கையாளர்களில் பலர் எந்தவித எசென்ஸ் சேர்க்காமல் ஐஸ்கிரீம்களை தயாரிக்க முடியாதான்னு கேட்டாங்க. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொய்யா, அத்தி, மாம்பழம், பலாவில் ஐஸ்கிரீம்களை தயாரித்தேன்.
சாம்பிள்களை கொடுத்த போது பலருக்கும் பிடித்திருந்தது. சாதாரணமாக மற்ற கிடைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம் ஃபிளேவர்களை தவிர்த்து முழுக்க முழுக்க பழங்கள் மட்டுமே கொண்டு ஐஸ்கிரீம்களை தயாரித்தேன். இதை மக்கள் மத்தியில் சேர்க்க எனக்கு ஒரு வருடமானது’’ என்றவர், அதன் தயாரிப்பு முறைகளை விவரித்தார்.
‘‘எல்லோருக்கும் விருப்பமான ஐஸ்கிரீமை, குறிப்பாக குழந்தைகளை பாதிக்காதபடி எங்களால் ஆரோக்கியமாக கொடுக்க முடியும். எனக்கு உதவியாக என் மகனும் இந்த பிசினசில் இருக்கிறார். ஃப்ளேவர்கள் ஐடியா எல்லாம் அவருடையதுதான். தயாரிப்பு மட்டும் என்னுடையது. ஐஸ்கிரீம் தயாரிக்க தனிப்பட்ட பேக்டரியும் அமைத்திருக்கிறோம். அங்கு ஐஸ்கிரீம்கள் தயாரிப்பிற்கு தேவையான மெஷின்கள் உள்ளன.
பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி தண்ணீர் சேர்க்காமல் ஐஸ்கிரீம்களை தயாரிக்கிறோம். காய்கறிகளில் வெங்காயம், தக்காளி தொடங்கி பாகற்காய் வரையும் கீரைகளில் முருங்கை, அரைக்கீரை, வல்லாரையும், மசாலாப் பொருட்கள், சிறுதானியங்கள், மூலிகைகளில் துளசி, இஞ்சி, மிளகு என யாரும் யோசித்துக்கூட பார்க்க முடியாத ஃப்ளேவர்களில் எங்களிடம் ஐஸ்கிரீம்கள் உள்ளன.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், மசாலாக்களைதான் பயன்படுத்துகிறோம். எங்களின் தனித்தன்மையே பிரிசர்வேட்டிவ் கலப்பதில்லை என்பதுதான். நாங்க தயாரிக்கும் கீரை வகை ஐஸ்கிரீம்கள் 3 மாதங்கள் வரை கெடாது. மற்ற ஐஸ்கிரீம்களின் ஷெல்ஃப் லைஃப் ஆறு மாதங்கள். எங்கள் தயாரிப்புகளை உணவுக் கட்டுப்பாட்டு துறை பரிசோதித்து அங்கீகாரம் கொடுத்துள்ளது. தற்போது என்னுடன் ஐந்து பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
கோயம்புத்தூர், தேனீ, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் விற்பனை நிலையங்களும், சென்னையில் முதன் முதலாக கொடுங்கையூரில் பிரான்சிஸ் உரிமையும் கொடுத்துள்ளோம். பெண்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பார்த்து பிரான்சிஸ் உரிமைக்கு தொடர்பு கொள்கின்றனர். என்னைப் போல உயரத் துடிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை தர விரும்புகிறேன். அவர்கள் உயரும் போது நானே உயர்நிலை அடைந்ததாய் பெருமைக் கொள்கிறேன்’’ என்றவர், வீட்டில் இருந்து செய்யக்கூடிய குறிப்பிட்ட சில வகை ஐஸ்கிரீம்களை பெண்களுக்கு சொல்லித் தருகிறார்.
‘‘திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு ஆர்டர் மூலம் சப்ளை செய்கிறோம். ஐந்து வருடங்களாக தொடர்ந்து தேனி முழுவதும் லைவ் கவுண்டர்கள் வைத்திருக்கிறேன். அரசு ஏற்பாடு செய்யும் ஸ்டால்களிலும் பங்கேற்கிறேன். கல்யாண ஆர்டர்கள் கொடுப்பவர்கள் எங்களை போல் வித்தியாசமாக முயற்சி செய்பவர்களுக்கு நம்பி ஆர்டர்கள் கொடுக்க முன் வருகிறார்கள். வாழ்க்கையில் வரும் ஏற்ற இறக்கங்களை நினைத்து கஷ்டப்பட்டு மூலையில் உட்காராமல் எழுந்து ஓடுங்க’’ என்று பெண்களுக்கு ஆலோசனை கூறும் லதா ராஜா தன் கணவர் பெயரில் ‘ஐஸ் ராஜா’ என்ற பிராண்டிலும் ஐஸ்கிரீம் கடையினை நிர்வகித்து வருகிறார்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: கோ.தட்சணாமூர்த்தி
