நன்றி குங்குமம் தோழி
கேக் மற்றும் பேக்கரி சார்ந்த உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை வீட்டில் செய்து சாப்பிடும் போது, ஆரோக்கியமானது கூட. கேக் தயாரிக்கும் முறைகள் குறித்து இணையத்தில் பல வீடியோக்கள் மற்றும் செய்முறை குறிப்புகள் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு உணவினை முழுமையாக செய்வதற்கான அனைத்து அடிப்படை விஷயங்களும் இருக்காது. ஒரு உணவினை தயாரிப்பது மட்டுமில்லாமல் அதனை எவ்வாறு விற்பனை செய்யலாம், அதன் மூலம் லாபம் எப்படி பார்க்கலாம் என அனைத்து பயிற்சியினையும் அளித்து வருகிறார் பெங்களூரை சேர்ந்த ஜெயத்ரா. முழுக்க முழுக்க ஆன்லைன் பயிற்சி என்பதால், உலகில் எந்த மூலையில் உள்ளவர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
‘‘நான் 2014ல் ஆரம்பித்தேன். நான் ெபாறியியல் பட்டதாரி. நான் படிப்பு முடிச்ச பிறகு சில வருடங்கள் கார்ப்பரேட் துறையில் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமா ஒரு விபத்து ஏற்பட்டதால், டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டார். மூணு மாசம் எதுவுமே செய்ய முடியவில்லை. அதுவே எனக்கு பெரிய ஸ்ட்ரெசா இருந்தது. உடல் நிலை சரியானதும், ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினேன். அப்படித்தான் பேக்கிங்கான பயிற்சி மேற்கொண்டேன். இதற்காக தனிப்பட்ட பயிற்சி மையம் எல்லாம் நான் போகவில்லை.
செல்ஃப் லேர்னிங் என்றுதான் சொல்ல வேண்டும். கற்றுக்ெகாண்டதை தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்தேன். ஆர்டர் மூலமாகவும் செய்தேன். அதை சாப்பிட்ட என்னுடைய ஒரு வாடிக்கையாளர் சுவை நன்றாக இருப்பதாக கூறியது மட்டுமில்லாமல் எவ்வாறு செய்வது என்று பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்படித்தான் நான் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். இது முழுக்க முழுக்க ஆன்லைன் என்பதால் என்னுடைய பெயரிலேயே இணையம் ஒன்றை துவங்கி அதன் மூலம் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். சொல்லப் போனால் இந்தியாவில் ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படும் பெரிய பேக்கரி பிளாட்ஃபார்ம் எங்களுடையதுதான்’’ என்றவரிடம் உலகம் முழுதும் 95000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
‘‘கோவிட் போது பலருக்கு ஏதாவது கற்றுக்ெகாள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலும், அதை பிசினஸாகவும் மாற்றினார்கள். அதற்கேற்ப பயிற்சிகளை அமைத்தேன். ஒரு விஷயம் கற்றுக் கொண்டால், அதன் மூலம் அவர்கள் சிறிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. குறைந்த பயிற்சி கட்டணம் மூலம் அவர்கள் பன்மடங்கு சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஏற்பதான் நான் என்னுடைய பயிற்சியும் அமைத்திருக்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் அடிப்படையை புரிந்துகொண்டால் போதும். ஒரு கேக்கினை தயாரிக்க மட்டும் சொல்லித் தருவதில்லை.
அதைக் கொண்டு எப்படி சம்பாதிக்கலாம், விற்பனை செய்யலாம் என்றும் சொல்லித் தருவோம். பேக்கரி என்றால் மைதாவில் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை. சிறுதானியங்கள் போன்றவற்றிலும் எவ்வாறு செய்யலாம் என்பதற்கான தனிப்பட்ட பயிற்சிகளும் உள்ளன. ராகி, கம்பு, தினை போன்ற சிறுதானியங்கள் மட்டுமே கொண்டு பிரெட் செய்யப்படுவதை பலர் ஆர்வமாக கற்றுக்கொள்ள முன்வந்தனர். இது போல் வித்தியாசமான பல பேக்கரி உணவுகளை நாங்க உருவாக்கியது மட்டுமில்லாமல் சொல்லியும் கொடுக்கிறோம்.
இதைப் பார்த்து கற்றுக் கொண்டு பலரும் இதன் மூலம் சம்பாதிப்பதாக கூறும் போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது’’ என்றவர் ஒரு படி மேலே சென்று சிறுதானியங்களில் ஐஸ்கிரீமும் செய்வதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.
‘‘பேக்கரியில் அளவுதான் முக்கியம். அந்த அடிப்படை புரிந்துகொண்டாலே போதும். அதன் பிறகு நம்முடைய பகுப்பாய்வுத் திறன் கொண்டு எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கலாம். அப்படித்தான் நான் சிறுதானியங்களில் பிரெட், பிஸ்கெட், ஐஸ்கிரீம் எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். தரத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். ஒரு விஷயம் செய்தால், அதன் தரம் என்றுமே குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு உணவு சரியாக வரும் வரை எனக்கு தூக்கமே வராது. அது மைதா, சிறுதானியங்கள் எதுவாக இருந்தாலும் பெஸ்டாக கொடுக்க வேண்டும்.
காரணம், சிறுதானியங்கள் செய்யும் போது அந்த உணவும் சாதாரண பிரெட் மற்றும் கேக்கின் சுவையில் இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். சரியான பதம் வரும் வரை செய்து பார்த்துக் கொண்டே இருப்போம். சில சமயம் ஒரு உணவினை 200 முறை கூட செய்திருக்கிறோம். அதுதான் என்னுடைய சக்சஸுக்கான மந்திரம். உதாரணத்திற்கு கேழ்வரகில் இட்லி செய்யும் போது அதை வேக வைக்கும் நேரம் மாறுபடும். அதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடையது ஏழு பேர் கொண்ட குழு. நாங்க எல்லோரும் சேர்ந்துதான் ஒரு உணவினை உருவாக்குவோம்’’ என்றவர் பயிற்சி திட்டம் குறித்து விவரித்தார்.
‘‘நான் பேக்கிங் செய்த போது பலரும் கற்றுத் தரச்சொல்லி கேட்டார்கள். அப்பதான் எனக்கு புரிந்தது, நான் ஒரு நல்ல டீச்சர்னு. மேலும், நான் சொல்லிக் கொடுத்து அதன் மூலம் ஒருவரின் வாழ்க்கை சக்சஸாக மாறுவதைப் பார்க்கும் போது மனசுக்கு திருப்தியாக இருந்தது. இதே போல் பல சக்சஸ் பெண்களை உருவாக்க வேண்டும்னு எண்ணம் ஏற்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆன்லைன் பயிற்சி. உலகம் முழுதும் யார் வேண்டும் என்றாலும் இந்தப் பயிற்சியினை எடுத்துக் கொள்ள முடியும். பயிற்சி பெற விரும்புபவர்கள் எங்களின் www.jeyadra.com என்ற இணையம் சென்றால் அங்கு பலவிதமான பயிற்சிகள் இருக்கும். அதில் அவர்கள் விரும்பிய பயிற்சியினை தேர்வு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு அந்தப் பயிற்சிக்கான வீடியோ உங்களுக்கு வழங்கப்படும். அதில் அனைத்து விவரங்களும் இருக்கும். கற்றுக் கொண்டு அதை ெசய்து விற்பனை செய்தாலே இரட்டிப்பு லாபம் பார்க்க முடியும்.
ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ என்பதால் அவங்க அதைப் பார்த்து கற்றுக்கொள்ளும் படி மிகவும் தெளிவாக பதிவு செய்திருக்கிறோம். வீடியோ மட்டுமில்லாமல் ரெசிபி குறித்த குறிப்புகளும் தருகிறோம். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதில் ஒரு பயிற்சியில் அடிப்படை விஷயங்களில் இருந்து அந்த உணவினை முழுமையாக செய்யும் வரை அனைத்து விவரங்களும் இருக்கும்.
முழுக்க முழுக்க ஆரோக்கியமான முறையில் தயாரிக்க தான் சொல்லித் தருகிறோம். உதாரணத்திற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து எப்படி செய்யலாம் என்று சொல்லித் தருவோம். எங்களின் நோக்கம் ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதால் சிறுதானியங்களில் என்னென்ன பேக்கரி உணவுகளை தயாரிக்கலாம் என்பது குறித்து நிறைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான பயிற்சி முறைகளை கூடிய விரைவில் கொடுக்க இருக்கிறோம்’’ என்றார் ஜெயத்ரா.
தொகுப்பு: ஷம்ரிதி
