×

காலம் கடத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் ஈரானுக்கு டிரம்ப் கடைசி எச்சரிக்கை: மூத்த கடற்படை தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஜெருசலேம்: காலம் கடத்தாமல் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. போர் நிறுத்தத்துக்கான 15 அம்ச திட்டத்தை ஈரானுக்கு பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. எனினும் இதனை ஈரான் உறுதி செய்யவில்லை. இதனிடையே ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகள் மீதான தங்களது நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளன. இதன் காரணமாக மேலும் பதற்றத்துக்கான சாத்தியங்களே தொடர்கின்றது.

இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேலும் ஒன்றன் மீது ஒன்று தாக்குதல் நடத்தின. ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் ஈரான் பகுதியை நெருங்கியுள்ளன. அதே நேரத்தில் ஈரான் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது. இஸ்ரேலில் ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை ஒலித்துக்கொண்டே இருந்தது. மேலும் வளைகுடா நாடுகளும் ஈரானின் தாக்குதல்களை இடைமறிக்க தீவிரமாக ஈடுபட்டன. இந்த போரில் ஈரானின் ராணுவத்தையும் அரசையும் கடுமையாக தாக்கி உயர்மட்டத் தலைவர்களை இஸ்ரேலும் அமெரிக்காவும் கொன்று வருகின்றன.

இதன் மற்றொரு தொடர்ச்சியாக ஈரானின் கடற்படைப்பிரிவுக்கான தளபதி அலிரெசா தங்சிரி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவர் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் பணியை மேற்பார்வையிட்ட அதிகாரிகளில் முக்கியமானவராக இருந்ததாக தெரிகின்றது. அலிரெசா கொல்லப்பட்ட செய்தியை ஈரான் இதுவரை உறுதிபடுத்தவில்லை. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மற்ற மூத்த கடற்படை தளபதிகளுடன் அலிரெசாவும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் விரைவில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்கள் வழியாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருக்கிறார். அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ‘‘ஈரான் தலைவர்கள் காலம் கடப்பதற்குள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஏனெனில் அது நடந்துவிட்டால் பின்வாங்குவதற்கு வழியே இல்லை” என்று அறிவுறுத்தி இருக்கிறார். 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஈரான் நிராகரித்த பின், ஈரான் ஒரு உடன்பாடை எட்டுமாறு எங்களிடம் கெஞ்சுகின்றது என்று நேற்று டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

* இந்தியா, சீனா உள்பட 5 நாட்டு கப்பல்களுக்கு அனுமதி
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்வதற்கு 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சில கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்து வந்தது. இந்நிலையில் சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு ஈரான் நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதனிடையே ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் எண்ணெய் டேங்கர்கள் உள்ளிட்ட வர்த்தக கப்பல்கள் ஆசியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் வரிசையில் நின்றுகொண்டுள்ளன. இந்த நெருக்கடி நீடித்தால் வளைகுடாவை நோக்கி செல்லும் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் வரும் வாரங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் தஞ்சங் பெலெபாஸ் மற்றும் கிளாங் துறைமுகங்களில் காத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

* ஈரான் கட்டணம் வசூல்
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜாசெம் முகமது அல் புடைவி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஈரான் கட்டணம் வசூலித்து வருகின்றது” என்று குற்றம்சாட்டினார்.

* அபுதாபியில் இந்தியர் உள்பட 2 பேர் பலி
ஈரானின் ஏவுகணைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன. இதில் ஏவுகணை சிதறல்கள் விழுந்த சம்பவத்தில் அபுதாபியில் ஒரு இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

* 10,000 இலக்குகள் மீது தாக்குதல்
அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் தலைவர் வெளியிட்ட வீடியோ காட்சியில், ‘‘நாங்கள் சாதித்தவற்றையும், எங்கள் நட்பு நாடான இஸ்ரேலின் வெற்றிகளையும் ஒன்றிணைத்து பார்த்தால் இரு நாடுகளும் இணைந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளோம். எங்களது தாக்குதல்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புக்களை நிலைகுலையச் செய்துள்ளன. எங்கள் போர் விமானங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் களத்தில் உறுதியான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஈரான் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டது” என்றார்.

* மத்தியஸ்தம் செய்வதை உறுதி செய்த பாக்.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே செய்திகளை பரிமாறி வருவதை பாகிஸ்தான் நேற்று உறுதிப்படுத்தியது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் டார் எக்ஸ் தள பதிவில், ‘‘அமெரிக்கா-ஈரான் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மூலமாக பரிமாறப்படும் செய்திகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா 15 அம்ச கோரிக்கைகளை பகிர்ந்துள்ளது. இவை குறித்து ஈரான் தற்போது ஆலோசித்து வருகின்றது. சகோதர நாடுகளான துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற நாடுகளும் இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

* ரஷ்ய சரக்கு கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: கிரெம்ளின் மாளிகை அறிவிப்பு
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லும் வணிக கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பை வழங்க மாஸ்கோ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கிரெம்ளின் மாளிகையின் உதவியாளர் நிகோலாய் பட்ருஷேவ் தலைமையிலான கடல்சார் வாரியம், ரஷ்யாவின் சரக்கு கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பை வழங்க புதிய விதிகளை உருவாக்கி உள்ளது. அதன்படி, ரஷ்ய கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கப்பல்களில் ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுக்களை நியமிக்கவும் பரிசீலித்துள்ளது. இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள், முக்கியமான அசோவ் கருங்கடல் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் செல்லும் ரஷ்ய சரக்கு கப்பல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒரு நாளில் ரூ.71 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறது ரஷ்யா
ஈரான் போரால் பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விற்பனை அதிகரித்து, ரஷ்யா ஒரு நாளைக்கு ரூ.71 ஆயிரம் கோடி சம்பாதிப்பது தெரிய வந்துள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 100 டாலரைக் கடந்ததால், ரஷ்யாவின் எண்ணெய் விலை உயர்வால் வருவாய் அதிகரித்து உள்ளது. மேலும் இந்தியாவிற்கான சலுகை விலையும் நிறுத்தப்பட்டுள்ளது. மார்க்கெட் கட்டணம் மட்டுமே தற்போது இந்தியாவிடம் வசூலிக்கப்படுவதால் ரஷ்யாவின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் மாதாந்திர எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் சுமார் ரூ.1 லட்சம் கோடியில் இருந்து கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய கச்சா எண்ணெய் விலை சுமார் 72% உயர்ந்துள்ளது.

இது உலகளாவிய அளவுகோலை மிகப்பெரிய வித்தியாசத்தில் விஞ்சி, மாஸ்கோவின் ஏற்றுமதி வருவாயை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் போர் முடிந்து எரிசக்தி சந்தைகள் நிலைபெற்றால் கூட ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போருக்கு முந்தைய கணிப்புகளை விட 63% அதிகமாகும், இதன் மூலம் ரூ.8 லட்சம் கோடி எதிர்பாராத வருவாய் கிடைக்கும். போர் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், அந்த எண்ணிக்கை ரூ.36 லட்சம் கோடியாக உயரும், இது அசல் கணிப்புகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

Tags : Trump ,Iran ,Israel ,JERUSALEM ,U.S. ,PRESIDENT TRUMP ,United States ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நேபாள புதிய பிரதமராக பலேன் இன்று பதவிஏற்பு